தேநீர், செய்தித்தாள் விற்பனை செய்தவர் உ.பி.யின் துணை முதல்வர் கேசவ்: 4-வது முறையாக தேர்தலில் போட்டி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாவட்டம் அலகா பாத். இதன் மேற்கு தொகுதி மக்களவை தேர்தலில் கேசவ் பிரசாத் மவுரியா முதல்முறை 2004-ல் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போது, கேசவ் 3-வது நிலைக்கு தள்ளப்பட்டார்.

மீண்டும் அங்கு வந்த இடைத் தேர்தலில் பாஜக சார்பில் கேசவ் போட்டியிட்டார். அப்போதும் கேசவ் 3-வது இடத்தையே பெற முடிந்தது. எனினும் மனம் தளராத கேசவ், பாஜக.வுக்காக தனது சொந்த ஊரான சிராத்துவில் 2012 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு முதல்முறை எம்எல்ஏ.வானார். மீண்டும் 2014 மக்களவை தேர்தலில் அருகிலுள்ள பூல்பூர் தொகுதியில் கேசவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதிலும் கேசவ் வெற்றி பெற்றார். அத்துடன் 2016-ல் உ.பி. மாநில பாஜக தலைவரானார். கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் கேசவ் செய்த உழைப்பால் ஆட்சி அமைத்த பாஜக, அவரை துணை முதல்வராக்கியது. இந்நிலையில், உ.பி.யின் மேலவை உறுப்பினரான கேசவ், சட்டப்பேரவை தேர்தலில் 4-வது முறையாக தற்போது களம் இறக்கப்பட்டுள்ளார்.

சொந்த தொகுதி சிராத்துவில் உள்ள கவுஸாம்பி பகுதியில்தான் தனது தந்தையின் கடையில் கேசவும் தேநீர் விற்பனை செய்துள்ளார். தவிர சாலைகளில் செய்தித்தாள்களை கூவி கூவி விற்றுள்ளார்.

கவுஸாம்பியில் கேசவ் பிரசாத் தந்தையின் கடை சிறியது. எனினும் அங்கு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் இடமாக இருந்தது. அவர்களுக்கு தேநீர் விநியோகம் செய்யும்போது அவர்களது உரையாடல்களை கேட்டு கேட்டு அரசியலுக்கு வந்துள்ளார் கேசவ். பின்னர் தன்னை ராமர் கோயில் இயக்கத் தில் ஈடுபடுத்திக் கொண்டார்.

அதன்பிறகு பாஜக.வுக்கு வந்த கேசவ் பிரசாத்தின் உழைப்பு அவரை துணை முதல்வர் வரை உயர்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE