மூன்றாவது டோஸ் கோவாக்சினால் ஆன்டிபாடி அளவு அதிகரிக்கிறது: ஐசிஎம்ஆர் நம்பிக்கைத் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மூன்றாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உடலில் ஆன்டிபாடி அளவு கணிசமாக அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நம்பிக்கை தரும் தகவலைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, முன்களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்துவது இன்று (திங்கள்கிழமை) தொடங்கியுள்ள நிலையில் ஐசிஎம்ஆரின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் அறிவிப்பாக உள்ளது.

நோயை உண்டாக்கும் ஒரு கிருமி நமது உடலுக்குள் ஊடுருவும்போது அந்தக் கிருமிக்கு எதிராக நமது உடல் உருவாக்கும் எதிர்ப்பாற்றலை ஆன்டிபாடிகள் எனக் கூறுகிறார்கள். இது இயல்பாக நோய் பாதித்தவர்களுக்கும் உண்டாகிறது. நோய் வராதவர்கள் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் உடலில் கோவிட் எதிர்ப்பு ஆன்டிபாடிக்கள் உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி குறித்து ஐசிஎம்ஆர் பதிவிட்ட ட்வீட்டில், "கோவாக்சின் மூன்றாவது டோஸ் நம்பிக்கையளிக்கிறது. கோவாக்சின் முன்னெச்சரிக்கை டோஸ் போடுவதால் முதம் இரண்டு டோஸ் செலுத்தியதிலிருந்து 6 மாதங்களுக்குப் பின்னர் செலுத்தப்படும் இந்த டோஸ் இம்மியூனோஜெனிசிட்டியை அதிகரிக்கிறது. மரபணு ஒப்புமை உடைய, ஒப்புமையற்ற சார்ஸ் CoV 2 திரிபுகளுக்கு எதிராக இந்த முன்னெச்சரிக்கை டோஸ் நல்ல அளவில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. முன்னெச்சரிக்கை டோஸ் சோதனையின்போது எந்தவித தகாத விளைவுகளும் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி திட்டம் தொடங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்த வருவோர் 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியில் எந்த தடுப்பூசியும் கலந்து வழங்கப்படாது. அதாவது இரு டோஸ் தடுப்பூசி கோவிஷீல்ட் ஒருவர் செலுத்தியிருந்தால், பூஸ்டர் டோஸும் கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் இன்று காலை 7 மணி நிலவரப்படி, 1,51,57,60,645 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE