ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு: பரிசோதனையைத் தீவிரப்படுத்த தமிழகம் உள்பட 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால், அறிகுறி இல்லாமல் பலர் பாதிக்கப்படுவதால், 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 65 சதவீதம் அதிகரித்து, 90 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதால், மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் லேசான பாதிப்புடன் விலகிவிடுகிறது. ஒமைக்ரானும் லேசான பாதிப்பைக் கொடுத்து நீங்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 9 மாநிலங்களில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும், வேகப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஆர்த்தி அஹுஜா, தமிழகம், பஞ்சாப், ஒடிசா, உ.பி. உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“தமிழகம், பஞ்சாப், ஒடிசா, உ.பி., உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்களில் கரோனா பரிசோதனை செய்யும் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது, கரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும், பாசிட்டிவ் வீதம் அதிகரித்த போதிலும் பரிசோதனையை அதிகப்படுத்தவில்லை.

கவலைக்குரியதாகக் கருதப்படும் ஒமைக்ரான் வைரஸ் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்திய அளவு அதிகமாக இருந்தபோதிலும் தொற்று குறையவில்லை. ஆதலால், தொடர்ந்து கண்காணிப்பு, கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமல் இருப்பது அவசியம்.

அதிவேகமாகப் பரவும் ஒமைக்ரான் வைரஸின் குணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மனதில் வைக்க வேண்டும், அதிகமான அளவில் அறிகுறி இல்லாமல்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால் தொடக்க நிலையிலேயே பரிசோதனையை அதிகப்படுத்தினால்தான் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டுபிடித்து ஒதுக்கிவைத்து, மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

இந்த 9 மாநிலங்களிலும் கரோனா பரிசோதனை செய்யும் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதை உணர்கிறோம். கரோனா தொற்று அதிகரித்தபோதிலும் பரிசோதனையை உயர்த்தவில்லை. கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், பிபிஇ கிட், போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் மருந்துகளைப் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்''.

இவ்வாறு அஹுஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE