சண்டிகரில் ஆம் ஆத்மி எழுச்சிக்கு காரணங்களும், பஞ்சாப் நோக்கிய கேஜ்ரிவாலின் இலக்கும்!

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப் - ஹரியாணா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்று தனது தேர்தல் அரசியல் கணக்கைத் தொடங்கியுள்ளது. 12-ல் பாஜகவும், 8-ல் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

சண்டிகர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசம். அங்கே இதுவரை காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சி செலுத்தியிருக்கின்றன. அத்தகைய பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றி எழுச்சி கண்டுள்ளது.

இந்த எழுச்சிக்கு ஐந்து முக்கியக் காரணங்களைப் பட்டியலிடுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஆம் ஆத்மி மாடல் ஆட்சி!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தும் மாதிரிதான் சண்டிகர் மக்களின் மன மாற்றத்துக்கு முதல் காரணம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. பாஜக தண்ணீர் வரியை 200 சதவீதம் உயர்த்தியிருந்தது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் தனது பிரச்சாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சி, தாங்கள் வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதி ஆம் ஆத்மிக்கு அருவிபோல் வாக்குகளைக் கொட்டியுள்ளது.

அதிருப்தி அலை:

மோடி அலையால் கடந்த 2016ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. 26 இடங்களில் 21 இடங்களை பாஜக கைப்பற்றியது. எஸ்ஏடி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது தொடங்கி சண்டிகரில் மாறி மாறி பாஜகவினர் மேயராக இருந்து வந்தனர். பாஜக ஆட்சிக் காலத்தில் திடக்கழிவு அகற்ற அதிகபட்சக் கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரி உயர்வு எனப் பல்வேறு வெகுஜன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது இயல்பாகவே மக்கள் மத்தியில் எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்கியது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் கூட அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது. இதுவும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கூடவே வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணமும் உயர்ந்தது. இப்படியாக எதற்கெடுத்தாலும் கட்டண உயர்வு என்ற பாஜகவின் போக்கு மீதான எதிர்ப்பலைதான் இத்தேர்தலில் எதிரொலித்துள்ளது.

சுத்தம் என்றால் என்ன?

சண்டிகர் வாசிகள் தண்ணீர், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை என அனைத்திற்கும் பணத்தைக் கொட்டினாலும் கூட நகரப் பராமரிப்பு மிக மோசமாக இருந்தது. சுத்தம் என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு மாநகராட்சி நிர்வாகம் நடந்து கொண்டதும் பாஜகவின் இந்தச் சரிவுக்குக் காரணம். 2016-ல் நாட்டிலேயே இரண்டாவது தூய்மை நகரம் சண்டிகர். 2021-ல் சண்டிகர் இந்தப் பட்டியலில் 66-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. டாடும்ராஜா பகுதி குப்பை மேடாக மாறியது மட்டுமே மிச்சம். அரசு திடக்கழிவு மேலாண்மைக்கு என எந்த ஒரு கொள்கையும், திட்டமும் வைத்திருக்கவில்லை என்று மக்கள் பரவலாகக் குற்றம் சாட்டினர். சுத்தமான நகரம் என்ற பெருமையை அனுபவித்து மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தனிப்பட்ட முறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. விளைவு தேர்தலில் எதிரொலித்துள்ளது.

உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்:

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி உள்ளூர் பிரச்சினைகளைக் கையில் எடுத்துப் பேசியது. அதற்கான தீர்வுகளை முன்வைத்தது. ஆனால், பாஜக 2016ஆம் ஆண்டைப் போலவே இப்போதும் மோடி அலை என ஒற்றை ஆயுதத்தை நம்பியது. ஜெய் ஸ்ரீராம் என்று இந்துத்துவா கொள்கையை மட்டுமே நம்பி பாஜக மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை. உள்ளூர் பிரச்சினையை விடுத்து மோடி ஆட்சியின் கீழ் நாடு கண்ட வளர்ச்சி எனப் பட்டியலிட்டால் செவி கொடுக்க யார் இருப்பார்கள் என்பதற்கு சண்டிகர் மாநகராட்சி தேர்தல் ஓர் உதாரணம்.

மோடி அலையை வீழ்த்திய கோவிட் இரண்டாவது அலை:

கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவும் குறிப்பாக டெல்லி, பஞ்சாப், சண்டிகர் போன்ற பகுதிகளில் கடுமையான மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது. நாங்கள் மருத்துவமனை படுக்கைக்காகவும், ஆக்சிஜன் சப்ளைக்காகவும் தவித்தபோது பாஜக கவுன்சிலர்கள் தொலைபேசி அழைப்பைக் கூட எடுக்கவில்லை என ஆதங்கப்பட்ட மக்கள் அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பை அளித்துள்ளனர்.

இந்த ஐந்து காரணிகள்தான் சண்டிகரை பாஜகவிடமிருந்து பறித்துள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில் "சண்டிகர் வெறும் ட்ரெய்லர்தான். உண்மையான படம் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் தான்’’ என்று அக்கட்சி கூறுகிறது.

கேஜ்ரிவாலின் மிஷன் பஞ்சாப்!

டெல்லியில் வலுவான ஆட்சியை அமைத்துவிட்ட ஆம் ஆத்மி கட்சி கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாகவே பஞ்சாப்பில் களப் பணிகளை ஆரம்பித்துவிட்டது. பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தம் 117 தொகுதிகள். இதில் 59 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை அமைக்கும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரஸ் உட்கட்சிப் பூசல், அமரீந்தர் சிங் விலகல், சித்துவின் அதிரடி அரசியல் ஷாட்கள் என மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்டம் கண்டிருப்பதாகக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

காங்கிரஸின் வீழ்ச்சி நமக்கு சாதகம் என்று கணக்கிட்டிருந்த பாஜகவுக்கு சண்டிகர் மாநகராட்சித் தேர்தல் கிலியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெய்லரே இப்படியா என்று பாஜக தொண்டர்கள் ஆட்டம் கண்டுள்ளனர். தலைமையிடமும் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களைப் பிரதமர் மோடி ரத்து செய்துவிட்டாரே. அது போதாதா?! பஞ்சாப் தேர்தல் வெற்றிக்கு என்று பாஜக தொண்டர்கள் கேட்டால், அதற்கு நிச்சயமாக இல்லை என்ற பதிலைக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். வேளாண் சட்டங்கள் எதிர்ப்புப் போராட்டம் தேசியப் பிரச்சினை. பஞ்சாப்பில் நிறைய உள்ளூர் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு எப்படி பாஜக ஈடு கொடுக்கும் என்பதைப் பொறுத்தே வெற்றி எனக் கணித்துள்ளனர்.

இந்த வெற்றிடத்தை நிரப்பவே வியூகம் வகுத்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால் என ஆராய்ந்து சொல்லும் அரசியல் நோக்கர்கள், ஆம் ஆத்மியின் வியூகம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கணிக்கின்றனர்.

சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளைப் பேசித் தான் ஆம் ஆத்மி நாங்கள் சாமானியர்களுக்கானவர்கள் என்று மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். அதே திட்டம்தான் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் ஆம் ஆத்மி கையில் எடுத்துள்ளது. ஏற்கெனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்துக்காகப் போராடும் ஆசிரியர்களின் பக்கம் நிற்கிறது ஆம் ஆத்மி. இந்தப் போராட்டமே ஆம் ஆத்மி தூண்டிவிட்டதுதான் என காங்கிரஸ் குற்றம் சாட்டுவது வேறு கதை.

அடடே வாக்குறுதிகள்!

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இதனால், பஞ்சாப்பில் 77% முதல் 80% வரையிலான மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லாத நிலை ஏற்படும். மேலும், முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

"டெல்லியில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறும் மின்சாரத்தையே நாங்கள் மக்களுக்குக் கொடுக்கிறோம். இருந்தாலும் கூட அங்கு மின் தடையில்லை. மின் கட்டணமும் நாட்டிலேயே குறைந்த அளவில் இருக்கிறது. அதை சாத்தியமாக்கியது ஆம் ஆத்மி கட்சிதான். அதையே நாங்கள் பஞ்சாப்பிலும் செய்வோம்" என்று அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்த வாக்குறுதிகள் சாமான்ய மக்களை 'அடடே' என சபாஷ் சொல்ல வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

யாருக்கு ஷாக்?

மின் கட்டணம் இதுதான் பஞ்சாப் தேர்தலின் மையப் புள்ளி. இதைவைத்து தான் ஆம் ஆத்மி ஆளும் காங்கிரஸுக்கும், ஆட்சி செலுத்த ஆசைப்படும் பாஜகவுக்கும் 'ஷாக்' கொடுக்கப்போவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இருந்தாலும் சிறிய கட்சிகள் காங்., பாஜகவால் இழுக்கப்பட வாய்ப்புள்ளதால் தொங்கு சட்டசபைக்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது எனக் கூறுகின்றனர். இதில் அமரீந்தர் சிங் கட்சி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், ஹர்பஜன் சிங் காங்கிரஸில் சேர்வாரா? அவரால் என்ன பயன் கிடைக்கும் என்பதெல்லாம் அனுமானக் கேள்விகளாக இருக்க மெயின் பிக்சருக்காகக் காத்திருப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்