விஷமாகிய 'இருமல் சிரப்': குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என டெல்லி அரசுக்கு என்சிபிசிஆர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அரசின் சார்பில் நடத்தப்படும் மொஹல்லா கிளினிக்கில் வழங்கப்பட்ட இருமல் மருந்தைச் சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, அந்த மருந்தை வழங்க வேண்டாம் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக்கொண்டுள்ளது.

டெக்ஸ்ட்ரோமெதார்போன் என்ற இருமல் மருந்தைச் சாப்பிட்டுதான் 3 குழந்தைகள் இறந்ததால், அந்த மருந்து டெல்லி மருத்துவமனைகளிலும், நகரிலும் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று என்சிபிசிஆர் கேட்டுக்கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இருமல் மருந்தைச் சாப்பிட்டுக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் என்சிபிசிஆர் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசு சார்பில் நடத்தப்படும் மொஹல்லா கிளினிக்கில் மருத்துவர்கள் டெக்ஸ்ட்ரோமெதார்போன் இருமல் மருந்தைக் குழந்தைகளுக்குப் பரிந்துரைத்தனர். ஆனால், இந்த மருந்தைச் சாப்பிட்ட 3 குழந்தைகள் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக என்சிபிசிஆர் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கணூன்கோ கூறுகையில், “டெல்லி அரசு மருத்துவர்கள் செயல் குற்றவியல் அலட்சியம். மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். டெல்லி நகரில் டெக்ஸ்ட்ரோமெதார்போன் மருந்தை சப்ளை செய்யவிடாமல் தடுக்க வேண்டும். ஏற்கெனவே புழக்கத்தில் இந்த மருந்து இருந்தாலும் அதைத் தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, மருந்து நிறுவனங்கள், மருத்துவர்கள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கக் கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இருமலுக்காக டெக்ஸ்ட்ரோமெதார்போன் மருந்து பரவலாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அதிகமாக எடுக்கும்போது, மயக்கம், வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

டெல்லியில் கடந்த ஜூன் 29 முதல் நவம்பர் 21-ம் தேதி வரை டெக்ஸ்ட்ரோமெதார்போன் மருந்து பரிந்துரைத்து அதைச் சாப்பிட்டு விஷமாக மாறிய 16 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 குழந்தைகளும் சுவாசக்குழாய் திடீர் செயலிழப்பால் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE