'இந்த தேசம் தேசியவாதிகளை மோசமாக நடத்துகிறது': கங்கணா ரணாவத்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்த தேசம் தேசியவாதிகளை மோசமாக நடத்துவதாக பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். சீக்கியர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கங்கணா ரணாவத் இன்று மும்பை கேர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

பின்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த தேசம் எப்போடும் தேசியவாதிகளை மோசமாக நடத்தி, அவர்களின் மாண்பை குறைத்து மதிப்பிடுகிறது. நீங்கள் உங்கள் தேசத்தை நேசிப்பவரா அப்படியென்றால் நீங்கள் சிலருக்கு மிகப்பெரிய எதிரியாகிவிடுவீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

கங்கணா ரணாவத் சீக்கியர்களுக்கு எதிராகக் கூறியது என்ன? கடந்த மாதம் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அப்போது, நடிகை கங்கணா ரணாவத், வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

கங்கணாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் புகார் அளித்தார், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரிடமும் புகார் கூறியிருந்தார். அவர் மீது எஃபஐஆர் பதிவு செய்யப்பட்டது. கங்கணா டிசம்பர் 22ல் கேர் காவல்நிலையத்தில் ஆஜராகும்படி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கங்கணா ரணாவத் இன்று மும்பை கேர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த தேசம் எப்போடும் தேசியவாதிகளை மோசமாக நடத்துவாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெறுகிறது. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கங்கணாவின் சமூக வலைதளப் பதிவுகள் அனைத்தையும் முறையான சென்சாருக்குப் பின்னரே பகிர அனுமதிக்க வேண்டும். அது நாட்டில் சட்டம், ஒழுங்கை பேண வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். வழக்கறிஞர் சரண்ஜித் சிங் சந்தர்பால் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் கங்கணா தனது அண்மை இன்ஸ்டா போஸ்ட்டில், தான் கேர் காவல்நிலையத்தில் ஆஜராகும் புகைப்படத்தினைப் பகிர்ந்து, இன்னொரு நாள், இன்னொரு காவல்நிலைய பயணம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது பாய்ந்த 100க்கும் மேற்பட்ட வழக்குகள், எஃப் ஐஆர்கள் மற்றும் பல மணி நேர விசாரணைகள் என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE