ராமர் கோயில் பெயரில் மிகப் பெரிய நில ஊழல்; ஆர்எஸ்எஸ், பாஜகவினர் ஆதாயம்: பிரியங்கா குற்றச்சாட்டு

By ஏஎன்ஐ

புதுடெல்லி: "உத்தரப்பிரதேசம் அயோத்தி நகரில் உள்ள ராமர் கோயில் அருகே நிலத்தை ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவாளர்கள், செல்வாக்குள்ள அதிகாரிகள் அபகரித்து, கோடிக்கணக்கில் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றுள்ளனர். கடவுள் ராமர் பெயரில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராமஜென்மபூமி - பாபர் மசூதி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின், ராமர் கோயிலைச் சுற்றியுள்ள ஏராளமான நிலத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மேயர்கள், பாஜக தலைவர்களின் உறவினர்கள், காவல் டிஐஜி ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வாங்கியுள்ளனர். ராமர் கோயில் அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக செய்தி நாளேட்டில் வந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏதாவது ஒரு தொகையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு சென்று நன்கொடைக்காக பிரச்சாரமும் நடந்தது. இது பக்தியோடு இணைந்த விஷயம். ஆனால், அதை வைத்து பாஜகவினர், ஆர்எஸ்எஸ் விளையாடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் வாங்கப்படாமல் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

தலித் மக்கள் தங்கள் நிலங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாமல், அதை சில உயர் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வாங்கியுள்ளனர். இந்த மிகப் பெரிய நில அபகரிப்பு ஊழலை உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.

பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் ஆகியோர் நிலத்தை வாங்கியதிலும், அதை கோடிக்கணக்கில் விற்பனை செய்ததிலும் தொடர்பு இருக்கிறது. ராமர் கோயிலுக்கு அருகே இருக்கும் நிலத்தில் கூட கொள்ளை டந்துள்ளது. பாஜக தலைவர்கள் மட்டுமின்றி, யோகி அரசின் ஊழியர்களும் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கடவுள் பெயரைக் கூறி பாஜக அரசு ஊழல் செய்கிறது. இந்த தேசத்தின் மக்களின் நம்பிக்கை மீதான தாக்குதல். ராமர் கோயில் அறக்கட்டளையின் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அதிகாரிகள், பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆதாயம் பெற செலவிடப்பட்டுள்ளது.

ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு கிடைத்தவுடன் அடுத்த 5 நிமிடங்களில் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி முதல் ரூ.18.5 கோடி வரை நிலம் விற்கப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடத்தில் பாஜக நிர்வாகிகள் ரூ.16.5 கோடி லாபமடைந்துள்ளனர்.

இந்த ஆவணங்களைப் பாருங்கள், ராமர் கோயிலுக்கு அருகே இருக்கும் நிலம் ரூ.2 கோடிக்கு இருமுறை விற்கப்பட்டுள்ளது, முதல்முறை ரூ.8 கோடிக்கும், 2-வது முறைரூ.18.5 கோடிக்கும் அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு இந்த துண்டு நிலம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு விற்கப்பட்டது. அந்த நபர் அந்த நிலத்தை இரு பிரிவுகளாக விற்பனை செய்தார். முதல் பிரிவை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.8 கோடிக்கும், 2-வது பகுதியை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ரூ.2 கோடிக்கு ரவி மோகன் திவாரி என்பவர் வாங்கினார். ஆனால், அடுத்த 5 நிமிடங்களில் ரவி தான் வாங்கிய ரூ.2 கோடி நிலத்தை ரூ.18.5 கோடிக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்பனை செய்துள்ளார்.

ஒரு தனிநபருக்கு ரூ.8 கோடிக்கு விற்கப்பட்ட நிலம், அடுத்த 5 நிமிடங்களில் ரூ.18.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது ஊழல் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது. இந்த நில விற்பனைக்கு சாட்சியங்கள் யார், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகியும், அறக்கட்டளை உறுப்பினரும், மற்றொருவர் அயோத்தி மேயர்.

சில நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு, அது அதிகமான விலைக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நன்கொடை மூலம் மக்களிடம் பெறப்பட்ட பணம், நிலம் வாங்கியதன் மூலம் செலவு செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க மாவட்ட அளவிலான அதிகாரியை உ.பி. அரசு நியமித்துள்ளதாக அறிந்தேன். ராமர் கோயில் அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின் மத்திய அரசு உருவாக்கியது. ஆதலால் விசாரணை என்பது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில்தான் நடக்க வேண்டும்" என்றார் பிரியங்கா காந்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE