'இந்துக்கள் உண்மையின் வழியில் செல்வர்; இந்துத்துவா மதத்தின் போர்வையில் கொள்ளையடிக்கும்': ராகுல் காந்தி ட்வீட்

By ஏஎன்ஐ

இந்துக்கள் உண்மையின் வழியில் செல்வர்; ஆனால் இந்துத்துவா மதத்தின் போர்வையில் கொள்ளையடிக்கும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்மபூமி அமைந்துள்ள பகுதிகளில் பாஜகவினரும், அம்மாநில அரசு அதிகாரிகளும் நிலங்களை வாங்கிக் குவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை முன்வைத்தே ராகுல் காந்தி இத்தகைய ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ராம ஜென்மபூமி பகுதியில் நிலங்கள் வாங்கிக் குவிக்கப்படுகின்றனவா என்பது குறித்து வருவாய்த் துறை சிறப்புச் செயலர் தலைமையிலான குழு விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாகவே ராகுல் காந்தி இந்துத்துவா மீது விமர்சனங்களை வைத்து வருகிறார். அண்மையில் கூட அமேதியில் பேசிய அவர் "ஒருபுறம் இந்து, மறுபுறம் இந்துத்துவாவாதி. உண்மையும், அன்பும், அஹிம்சையும் ஒருபுறம். பொய்மையும், வெறுப்பும், வன்முறையும் மறுபுறம் நிற்கின்றன.

இந்துத்துவாவாதி கங்கையில் மட்டும் தான் குளிப்பார். ஆனால், இந்து கோடிக்கான மக்களுடன் சங்கமிப்பார்.

நரேந்திர மோடி நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிராறே. அவர் எப்போது உண்மையைப் பாதுகாத்துள்ளார். அப்படியென்றால் அவர் இந்துவா? இந்துத்துவாவாதியா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

நாட்டில் மதம் பற்றிய அதுவும் இந்து மதம் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது நடைபெறும் போட்டி இந்துக்கும், இந்துத்துவாவாதிக்கும் எதிரானது. ஒருபுறம் அன்பைப் பரப்பும் இந்துக்களும், இன்னொரு புறம் பதவியைப் பறிக்க வெறுப்பை பரப்பும் இந்துத்துவாவாதிகளும் இருக்கின்றனர்.

ஓர் இந்து தனது ஆயுள் முழுவதும் மெய்வழியில் நடக்கிறார். உண்மைக்காக போராடுபவராக இருக்கிறார். ஓர் இந்து தனது சவால்களை எதிர்கொள்கிறார். இந்துத்துவாவாதியோ அரசியல் செய்கிறார். பொய்களைப் பரப்புகிறார். எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறார். ஓர் இந்துத்துவாவாதி நாதுராம் கோட்சே போல் இருப்பார்" என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE