இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 200க்கு மேல் அதிகரிப்பு: பிரதமர் மோடி நாளை ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200க்கும் மேல் அதிகரித்துள்ளதையடுத்து, சூழல் குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வேதசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதிலும் எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே வெளியே அனுப்பப்படுகிறார்கள்.

இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. ஒன்று என கணக்கைத் தொடங்கிய ஒமைக்ரான் தற்போது 213 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 213 பேரில் டெல்லியில் அதிகபட்சமாக 57 பேரும், மகாராஷ்டிராவில் 54 பேரும், தெலங்கானாவில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 19 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கேரளாவில் 15 பேர், குஜராத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 3 பேர், ஒடிசா, உ.பி.யில் தலா இருவர், ஆந்திரா, சண்டிகர், லடாக், தமிழகம், மேற்கு வங்கத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வார் ரூம் உருவாக்குங்கள், தேவைப்பட்டால் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம். பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல், கூட்டமாக கூடுமிடங்களில் திடீரென பரிசோதனை செய்தல் ஆகியவற்றை அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரபூர்வமாகத்தான் ஒமைக்ரான் எண்ணிக்கை வந்துள்ளது. ஆனால், ஒமைக்ரான் பாதிப்பு தெரியாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள், மருத்துவ வசதிகள், தடுப்பூசி நிலவரம் ஆகியவற்றை அறிய பிரதமர் மோடி, சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE