பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர ஜிஎஸ்டி மன்றத்தின் பரிந்துரை அவசியம்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி மன்றம் பரிந்துரை செய்தால் மட்டுமே பெட்ரோல், டீசல்ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரமுடியும் என்று மாநிலங்களவையில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ்பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படுமா என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அளித்துள்ள விளக்கம்:

சந்தை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதாக 2010 ஜூன் 26 மற்றும் 2014 அக்.19 ஆகிய நாட்களில் மத்திய அரசு முடிவு செய்தது. அதுமுதல், பன்னாட்டு நிலவரத்துக்கு ஏற்பவும், வரிக் கட்டமைப்பு, அந்நியச்செலாவணி மதிப்பு, உள்நாட்டு போக்குவரத்து உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையிலும், பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அறிவிக்கின்றன.

சமீபத்தில் மத்திய அரசு, பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 விலைக் குறைப்பு செய்தது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை பல மாநிலங்கள், மத்தியஅரசின் நேரடி ஆட்சிப் பகுதிகள்குறைத்துள்ளன.

அரசமைப்புச் சட்டம் பிரிவு 279A-ன்படி, பெட்ரோலிய கச்சா எண்ணெய், உயர்தர டீசல், பெட்ரோல், இயற்கை எரிவாயு, விமானஎரிபொருள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை, எப்போது முதல் நடைமுறைக்கு கொண்டுவருவது எனஜிஎஸ்டி மன்றம்தான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

தவிர, மத்திய ஜிஎஸ்டி சட்டப்பிரிவு 9(2)-ன் படி, மேற்கண்ட பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர ஜிஎஸ்டி மன்றத்தின் பரிந்துரை தேவை. ஆனால், அதனிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE