இந்தியா

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதி: மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

ஏஎன்ஐ

தலைநகர் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக இன்று 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

இது டெல்லி எல்ஜேஎன்பி மருத்துவமனை மருத்துவர் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், டெல்லியில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. நேற்று இரவு இருவருக்கும், இன்று காலை இருவருக்கும் தொற்று உறுதியானது.

4 பேரது நிலையை சீராக இருக்கிறது. அவர்களுக்கு எந்த தீவிர நோய் பாதிப்பும் இல்லை. ஒருவருக்கு மட்டும் தொண்டைவலி இருக்கிறது. இந்த 4 பேரில் ஒருவர் பிரிட்டன், ஒருவர் துபாய், ஒருவர் தென் ஆப்பிரிக்கா மற்றொருவர் ஸ்வீடனைச் சேர்ந்தவர்.

இப்போது, ஒமைக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றாளர்களுக்கென பிரத்யேகமாக 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். ஆனால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதற்கிடையில் டெல்லியில் அன்றாட கரோனா பாதிப்பு 85 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையாக உள்ளது.

கரோனா இரண்டாவது அலையின்போது டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கடுமையான மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.1.529 உருமாறிய கரோனா வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் எனப் பெயர் சூட்டியது.

இப்போது ஒமைக்ரான் தொற்று 70 நாடுகளில் பரவியுள்ளது.

SCROLL FOR NEXT