லக்கிம்பூர் கலவரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி. அது கவனக்குறைவால், அசட்டையால் நடந்தது அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தனர்.

இன்று காலை இரு அவைகளும் தொடங்கியதும், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேப்டன் வருண் சிங்கிற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் வங்கதேசம் உருவான நாளையொட்டி அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இரு அவைகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுந்து, "லக்கிம்பூர் கலவரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். விவசாயிகள் கொலையில் மத்திய அமைச்சர் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சதி நடந்திருக்கிறது. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதனால் ஆளும் கட்சி எம்.பி.க்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது. கேள்வி நேரத்தை நடத்தவிடுமாறு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவை தொடங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரினர் ஆனால், அதற்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மறுத்துவிட்டார். அதனால் அவையில் சலசலப்பு நிலவியது.

இரு அவைகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவை கூடியபோதும் தொடர்ந்து இதே கோரிக்கையை இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வைத்தனர். இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை அளித்த பின்பும் நடவடிக்கை இல்லையென்றால், பிரதமர்தான் அமைச்சரைப் பாதுகாக்கிறார் என்று அர்த்தம். அவைத் தலைவரும் எங்களின் கோரிக்கையைக் கேட்கவில்லை. அவையை திடீரென ஒத்திவைத்துவிட்டார்.

மாநிலங்களவை விதி 267-ன் கீழ் லக்கிம்பூர் விவகாரத்தைப் பற்றி விவாதிக்க நோட்டீஸ் கொடுத்தோம். விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி, கொலை என சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை தெரிவிப்பதால், அதைப் பற்றி விவாதிக்கக் கோரினோம். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் கூடுதல் வழக்குப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் முக்கிய சதிகாரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க அவைத் தலைவரிடம் கேட்டபோது அவர் எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்