தெலங்கானாவைச் சேர்ந்த 21 வயது ராணுவ வீரர் மாயம்: நடந்தது என்ன?

By செய்திப்பிரிவு

ராணுவப் பணியில் சேர்ந்து 6 மாதத்தில் ஊருக்குத் திரும்பி மீண்டும் பணிக்காகச் சென்ற தெலங்கானாவைச் சேர்ந்த வீரர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் கிரண் ரெட்டி (21). இவர் ராணுவத்தில் சேர்ந்து 6 மாதம்தான் ஆகிறது. இந்நிலையில் இவர் டிசம்பர் 5ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செர்யால் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

''சித்திப்பேட்டையில் உள்ள செர்யால் மண்டலம் போத்திரெட்டிப்பள்ளியைச் சேர்ந்த சாய் கிரண் ரெட்டி, ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் ஜவானாகப் பணியில் சேர்ந்தார். பணியில் இணைந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்புதான் கடந்த நவம்பர் 16ஆம் தேதி 20 நாள் விடுப்பில் ஊருக்கு வந்தார்.

சாய் கிரண் ரெட்டி, 20 நாள் விடுப்பில் நவ.16-ம் தேதி வீட்டுக்கு வந்ததாகவும் 20 நாட்கள் ஊரில் தங்களுடன் தங்கியிருந்ததாகவும் அவரது பெற்றோர் (தந்தை பட்டேல் ரெட்டி மற்றும் தாய் விஜயா) தெரிவித்தனர். பின்னர் டிச.5-ம் தேதி மதியம், சாய் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், சாய் கிரண் ரெட்டி தனது பெற்றோருடன் தொடர்பு கொள்ளவில்லை, மேலும் அவரது மொபைல் போனும் அன்றைய தினம் அணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு ஒருமுறை ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இருந்து தனது தந்தையை டிசம்பர் 8-ம் தேதி போனில் அழைத்துள்ளார்.

இளம் ராணுவ ஜவானின் பெற்றோர்கள் அவரது மகனின் இருப்பிடம் குறித்துக் கவலையடைந்துள்ளனர். அவர்கள் பஞ்சாப்பில் உள்ள ராணுவ அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தங்கள் மகன் அவரது வேலைக்குத் திரும்பவில்லை என்ற தகவலையும் பெற்றுள்ளனர்.

தற்போது சாய் கிரண் ரெட்டியின் தந்தை அளித்துள்ள புகாரின் பேரில் பூஜ்ஜிய எஃப்ஐஆர் வழக்கைப் பதிவு செய்து, டெல்லியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு ராணுவ அதிகாரி மாயமானது குறித்து தெரிவித்துள்ளோம்''.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதென்ன ஜீரோ எஃப்ஐஆர்?

காவல்துறையில் பதிவு செய்யப்படும் வழக்குகளில ஜீரோ எஃப்ஐஆர் என்ற கருத்து புதியது. இது குற்றம் நடந்த பகுதியைப் பொருட்படுத்தாமல் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட வழக்கில் காவல்துறை தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இனி கூற முடியாது. அத்தகைய எஃப்ஐஆர் பின்னர் விசாரணையைத் தொடங்கும் வகையில் உண்மையான அதிகார வரம்பைக் கொண்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும்.

2012இல் டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா கூட்டு பலாத்காரத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது விசாரணையைத் தொடங்குவதற்கும், அதிகார வரம்பில் இல்லாத சாக்குப்போக்கு இல்லாமல் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கும் காவல்துறையின் மீது சட்டப்பூர்வ கடமையை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE