ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை குணமடைந்தது. அந்தக் குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது.
அதேவேளையில், மூன்று வயது குழந்தை ஒன்று அறிகுறிகள் ஏதும் இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 33 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தான் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் ஒமைக்ரானால் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
இதில் ஒன்றரை வயதுக் குழந்தை, 3 ஆண்கள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் தான்சானியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள். மற்ற 4 பேர் நைஜிரியப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்குத் தொற்று உறுதியானது. இந்த 7 பேருமே அறிகுறியில்லாமல் லேசான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை காவல் துணை ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “மும்பை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 11 மற்றும் 12-ம் தேதிகளில் எந்தவிதமான போராட்டம், பேரணிகள், கூட்டங்கள், வாகன அணிவகுப்பு ஆகியவை நடத்தத் தடை விதிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அமராவதி, மாலேகான், நானேதேத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.