இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
33 வயது நிரம்பிய அந்த இளைஞர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர், கடந்த மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக மும்பை வந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.
இந்நிலையில் ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது மாதிரிகளை, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.
தற்போது மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 24 ஆம் தேதி 33 வயது இளைஞர் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து துபாய், டெல்லி வழியாக மும்பை வந்தார். அவர் இதுவரை தடுப்பூசியே எடுத்துக் கொள்ளவில்லை. அவருடன் தொடர்பில் இருந்த 12 ஹை ரிஸ்க் தொடர்புகளும், 23 குறைந்த ரிஸ்க் தொடர்புகளும் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு கரோனா நெகட்டிவ் என்றே பரிசோதனை முடிவு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் 38 நாடுகளுக்கு பரவியுள்ளது. ஆனால், இதுவரை ஒமைக்ரான் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. அடுத்த இரு வாரங்களில் ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் பரவுவது அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
ஒமைக்ரான் பரவல், தீவிரத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பித்தல், தடுப்பு நடவடிக்கைகள், கிளினிக்கல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.