மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மம்தாவுக்கு எதிராக என்னென்ன அஸ்திரங்களை கையில் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் இடதுசாரி கட்சியினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் சமீபத்தில் பணம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரங்களை ஆளும் கட்சிக்கு எதிரான ஆயுதமாக இடதுசாரிகள் பிரயோகிக்க தொடங்கி உள்ளனர். ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் வெளியான இந்த விவகாரம் தொடர்பாக 3 பொதுநல வழக்குகள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பித்தால் அது தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து, வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தவோ, வீடியோ ஆதாரங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கவோ ஆளும் கட்சியினர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆளும் கட்சியின் வேட்பாளர் பட்டி யலில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலரது பெயர் இடம்பெற்றிருப்பது அக்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சாரதா சிட் பண்ட் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ராவுக்கு சீட் தரப்பட்டுள்ளது. இவர் காமர்ஹட்டி தொகுதியில் திரிணமூல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார்.
முஸ்லிம் வாக்குகள் 27 சதவீதம்
சிறைக்காவலில் இருந்துவரும் மதன் மித்ரா விமர்சனப் பொருளாக மாறியுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் கிரிஷானு மித்ரா போட்டியிடுகிறார். மதச்சார்பின்மை முழக்கத்தையும் இடதுசாரிகள் முன்வைத்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் 70 சதவீத இந்துக்களும், 27 சதவீத முஸ்லிம்களும் உள்ளனர்.
முஸ்லிம்கள் மற்றும் வடக்கு மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் வாக்குகளை குறிவைத்து பிரச்சாரம் செய்துவரும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர், மதச்சார்பின்மையை காப்பாற்றவும், பாஜக-வின் தாக்கத்தை தடுத்து நிறுத்தவும் மம்தாவை தோற்கடிப்பது அவசியம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்டணியின் குற்றச்சாட்டுகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் ‘மா-மாதி-மானுஷ்’ என்ற கோஷத்துடன் தனது ஐந்து ஆண்டுகால சாதனைகளைச் சொல்லி மிகுந்த நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மம்தா. ‘தாய், தாய்நாடு, மக்கள்’ என்பதன் வங்காள மொழி முழக்கம்தான் இது.
40 லட்சம் இலவச சைக்கிள்
கடந்த 5 ஆண்டுகால திரிணமூல் ஆட்சியில் கன்யா திட்டத்தின்கீழ், 33 லட்சம் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 40 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், 108 நியாயவிலை மருந்துக்கடைகள், 80 நியாயவிலை மருத்துவ பரிசோதனை மையங்கள் திறந்திருப்பதை முக்கிய சாதனைகளாக குறிப்பிட்டு வருகிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்கான வருங்கால திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
விஐபி வேட்பாளர்கள்
முதல்வர் வேட்பாளர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தீபா தாஸ்முன்ஷி நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி. இவரும் கடந்த அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர். நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
பாஜக சார்பில் ஹவுரா வடக்கு தொகுதி யில் ரூபா கங்குலி போட்டியிடுகிறார். இவரும் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் நடித்த மகாபாரதம் தொலைக்காட்சி தொடர், இவரை நாடு முழுவதும் அடையாளம் காட்ட உதவியுள்ளது. இவரை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக லட்சுமி ரத்தன் சுக்லா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் மேற்குவங்க அணிக்கு தலைமை வகித்தவர். இந்திய அணியிலும் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இடதுசாரிகள் ஆட்சியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 67 சதவீதம் குறைந்துள்ளதை மம்தா சுட்டிக்காட்டி வருகிறார்.
5 ரூபாய்க்கு மண்குவளையில் டீ
நாட்டின் பெருநகரங்களில் ஒன்றான கொல்கத்தாவில் 5 ரூபாய்க்கு மண் குவளையில் டீ விற்கப்படுவது அதிசயமாக உள்ளது. முக்கிய இடங்களில்கூட சாலையோர கடைகளில் சிறிய மண் குவளையில் டீ போட்டுத் தருகின்றனர். இந்த மண் குவளையை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுகின்றனர். கொல்கத்தா நகரவாசிகள் இந்த மண்குவளை டீயை மிகவும் விரும்பி குடிக்கின்றனர். அவர்கள் பெறும் 5 ரூபாயில் மண்குவளையின் விலை, பால் சர்க்கரை, தேயிலைத்தூள், எரிபொருள், லாபம் இவை அனைத்தும் அடங்கியுள்ளதை நம்ப முடிகிறதா?
‘ பயப்பட வேண்டாம்’
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டு கள் ஆதிக்கம் உள்ள ஜங்கள்மகால் பகுதியில் மம்தா பிரச்சாரம் செய்தபோது, “யாராவது வெளியில் இருந்து வந்து உங்களை பயமுறுத்தினால் பயப்பட வேண்டாம். அவர்கள் மூன்று நாளில் வெளியேறி விடுவார்கள். மக்கள் ஆதரவுடன் தேர்தல் பணிகளை கவனியுங்கள். 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியில் 54,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பழிவாங்கும் நடவடிக்கைக்கு இங்கு இடமில்லை. இடதுசாரி காங்கிரஸ் கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். அவர்களால் நம்மை தோற்கடிக்க முடியாது. 400 ஆண்டுகால வளர்ச்சிப் பணிகளை 4 ஆண்டுகளில் செய்திருக்கிறோம். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்” என்று பேசினார்.
60 வீடியோ வெளியீடு
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ‘ஸ்டிங் ஆபரேஷன்’ பிரச்சாரத்தை சமாளிக்க, ஆளும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட 60 வீடியோ காட்சிகளை அக்கட்சி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் என குறுகிய கால அளவில் உள்ள இத்தகைய வீடியோ காட்சிகள் அதிக அளவில் (760) தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை படிப்படியாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago