பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் புரிகிறதா? எங்கள் குற்றச்சாட்டு நிரூபணமாகிவிட்டது: ப.சிதம்பரம் சாடல்

By செய்திப்பிரிவு


சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் பயம் காரணமாகவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கின.

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பயங்கரமான அடி கிைடத்து 14 தொகுதிகளில் தோற்றது.இதையடுத்து, பெட்ரோல், டீசல் வரியை குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

முன்னாள் நிதிஅமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். அதில் “ சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதி, 3 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலின் விளைவுதான் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரிக் குறைப்பு.

மத்திய அரசு விதிக்கும் கடுமையான உயர்ந்த வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது என்று தொடர்ந்து கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் வரிப்பேராசையால்தான் பெட்ரோல், டீசலுக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டதாக நாங்கள் குற்றம்சாட்டினோம்” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இடைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து 16 இடங்களில் வென்றுள்ளன. இந்த தேர்தல் வெற்றி குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் பதிவிட்ட கருத்தில், “ இடைத் தேர்தல் குறித்த சில சுவாரஸ்யமான ஆய்வுகளை இங்கு வழங்கியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் வாக்குகள் கடந்த தேர்தலைவிட கணிசமாக கூடியுள்ளது, வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

இ்வ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE