இமாச்சலில் பாஜகவுக்கு பின்னடைவு: 1 மக்களவை, 3 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதிக்கும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

நாட்டில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

மத்தியபிரதேசத்தில் கந்த்வா, இமாச்சலபிரதேசத்தில் மாண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதுபோல் அசாம் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (4), ம.பி., இமாச்சலபிரதேசம், மேகாலயா (தலா 3), பிஹார், கர்நாடகா, ராஜஸ்தான் (தலா 2), ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா (தலா 1) என 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக வெற்றி பெற்றிருந்தநிலையில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தொகுதியில் காங். 49.13%; பாஜக- 48.08% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கின்றன. இதுபோலவே அங்குள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் இடைத் தேர்தல் தோல்வி அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE