காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் தொடக்கம்

காஷ்மீரின் தால் ஏரியில் இருக்கும் படகு வீடுகள் உலகப் புகழ்பெற்றவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு வீடுகளில் தங்கி இயற்கை அழகை ரசிக்க தவறுவதில்லை. இந்நிலையில் தால் ஏரியில் உள்ள ஒரு படகு வீட்டில் திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளனர். காஷ்மீரிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் இதுதான். ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தா அண்மையில் இதை தொடங்கி வைத்தார்.

முதல் நாளில் இந்திப் படமான காஷ்மீர் கி காளி திரைப்படம் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், தால் ஏரி பகுதி மக்களுக்காகவும் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்றும், இங்கு சுற்றுலா மேம்படும் என்று ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலர் சர்மத் ஹபீஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “மாலை நேரங்களில் கூடுதலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதன் விளைவால் உருவானதே இந்த மிதக்கும் திரையரங்கம் திட்டம் ஆகும். உலகில் வேறு எங்கும் இதுபோன்ற மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் கிடையாது. இது காஷ்மீர் சுற்றுலாவை மேலும் பிரபலப்படுத்தும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE