’ட்விட்டர் வத்ரா’: பிரியங்கா காந்தியை கிண்டலடித்த உ.பி. துணை முதல்வர்: காங்கிரஸ் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

‘ட்விட்டர் வத்ரா’ என்று காங்கிஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உ.பி துணை முதல்வர் மவுரியா கிண்டல் செய்துள்ளார். இதற்கு காங்கிரஸ் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் லகிம்பூர் கேரியில் நடந்த போராட்டத்தின் போது விவசாயிகள் இறந்ததிலிருந்து பிரியங்கா காந்தி ஆளும்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனத் தாக்குதலைத் தொடுத்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் சில (பெண்) போலீஸ்காரர்கள் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதற்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்ட உத்தரப் பிரதேச அரசை இப்பிரச்சினைக்காகவும் பிரியங்கா கடுமையாக சாடியிருந்தார்.

அவரது விமர்சனங்களுக்கு பதிலடி வழங்கும்விதமாக ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீங்கள் எல்லாம் (செய்தியாளர்கள்) பிரியங்கா காந்தி வதேராவை எதிர்க்கட்சியாகவே அதிகம் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நானோ அவரை ட்விட்டர் வதேரா என்று அழைப்பதையே விரும்புகிறேன். மேலும் பழைய கட்சியின் அந்த மாநிலப் பொறுப்பாளர் புகைப்படம் எடுப்பதில் மட்டுமே ஆர்வத்துடன் இருக்கிறார்.

ஆமாம், காங்கிரஸ்காரர்களுக்கு புகைப்படங்களை கிளிக் செய்வதில் ஒரு நிபுணத்துவம் உள்ளது, அது பிரியங்கா காந்தி வதேரா, ராகுல் காந்தி அல்லது காங்கிரஸின் வேறு எந்த தலைவராக இருந்தாலும் சரி. அவர்களின் புகைப்படங்களைக் கிளிக் செய்யும் போட்டியில், அவர்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை விட முன்னிலையில் உள்ளனர்.

ஆனால், இந்த மூன்று கட்சிகளும் பொதுமக்களின் இதயத்தில் இடம்பிடிக்கத் தவறிவிட்டன.

உத்தரப் பிரதேசத்தில் வரவிருக்கும் 2022 சட்டமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 40 சதவீதம் தேர்தல் டிக்கெட்டுகளை காங்கிரஸ் ஒதுக்கும் என்ற பிரியங்கா அறிவிப்பு என்பதெல்லாம் எந்தப் பயனையும் அளிக்காது.

2017 தேர்தலில் காங்கிரஸ் வென்ற ஏழு இடங்களை மீண்டும் 2022 தேர்தலில் தக்கவைத்துக் கொள்வதே ஒரு சாதனையாக கருதப்படும்.

சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கட்சிகள் ஊழல், குற்றங்கள், மாஃபியாவை ஊக்குவிப்பது, சாதி அரசியலில் சமரசப் போக்கு ஆகியவற்றால் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய காலங்களை மக்கள் மறந்துவிடவில்லை.

இவ்வாறு உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய மந்திரி அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டி வந்த கார் மோதிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், சம்பவம் நடந்த மாவட்டத்திற்கு உபி.துணை முதல்வர் மவுரியா வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE