காஷ்மீர் மக்களுக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது; ஒதுக்கி வைக்கும் காலம் முடிந்தது: அமித் ஷா பேச்சு

By செய்திப்பிரிவு

காஷ்மீர் மக்களுக்கு இப்போது யாரும் அநீதி இழைக்க முடியாது. அவர்களை ஒதுக்கி வைக்கும் நேரமும் முடிவுக்கு வந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். பல்வேறு வளர்ச்சித் தி்ட்டங்களை அறிவித்து,பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அமித் ஷா பங்கேற்று வருகிறார்.

ஜம்மு நகரில் புதிய ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தையும் அமித் ஷா தொடங்கி வைத்தார். அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், தர்மேந்திர பிரதான், லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோர் உடன் சென்றனர்.

இந்நிலையில் ஜம்முவில் உள்ள பகவதிநகரில் இன்று நடந்த பேரணியில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் இனிமேல் யாரும் எந்தவிதமான இடையூரும் ஏற்படுத்த முடியாது. ரூ.1200 கோடி மதிப்புள்ள முதலீடு ஏற்கெனவே வந்துவிட்டது. 2022ம் ஆண்டுக்குள் ரூ.51 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீரின் இளைஞர்கள் வளர்ச்சியில் இணைந்தால், தீவிரவாதிகளின் சதித்திட்டம் தோல்வி அடைந்துவிடும்.

காஷ்மீரில் எந்த அப்பாவி மக்களும் வன்முறையில் கொல்லப்படக்கூடாது, தீவிரவாதத்தை துடைத்தெறியவேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரூ.210 கோடி மதிப்பில் ஜம்மு நகரில் புதிய ஐஐடி உயர்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதி, உடற்பயிற்சி மையம், உள்ளரங்குகள், விளையாட்டு கூடம் போன்றவை உள்ளன.

ஜம்முவுக்கு நேற்று வந்தேன் இன்று சொல்கிறேன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இப்போதிருந்து யாரும் இந்த மாநிலத்துக்கு அநீதி இழைக்க முடியாது. இந்த மாநிலத்தின் வளர்ச்சியை சீர்குலைக்க சிலர் முயல்கிறார்கள், ஆனால், யாராலும் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது என்று நான் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE