காஷ்மீரில் 70 ஆண்டுகள் ஆண்ட மூன்று குடும்பங்கள்; 40,000 பேர் படுகொலை: அமித் ஷா கடும் தாக்கு

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளில் மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன, இந்த காலத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தியை அமித் ஷா மறைமுகமாக விமர்சித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் பர்வேஷ் அகமது தரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் நவ்காம் கிராமத்திலும் ஆய்வு செய்தார்.

பின்னர் காஷ்மீர் பாதுகாப்பு சூழல் குறித்து உளவுத்துறை, பாதுகாப்புப்படை தலைவர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் கூட்டத்தில் பங்கேற்றார்.

காஷ்மீரில் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு அமித் ஷா செல்வது இதுவே முதல்முறை. பின்னர் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் இளைஞர் சங்க உறுப்பினர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

காஷ்மீர் மாநிலத்தில் தொகுதி மறு சீரமைப்பு அதைத் தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படும். அதன் பிறகு மாநில அந்தஸ்து வழங்கப்படும். காஷ்மீரி இளைஞர்களுடன் நான் நட்பு கொள்ள விரும்புகிறேன். முன்பு 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் ஜனநாயகத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு வந்துள்ளது, இது முன்பு ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே .

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பற்றியும் இணையதளம் நிறுத்தப்பட்டது பற்றியும் மக்கள் கேள்வி எழுப்பினர். ஊரடங்கு இல்லை என்றால், எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. காஷ்மீர் இளைஞர்கள் ஊரடங்கு மற்றும் இணையத் தடையால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று குடும்பங்கள் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தன. ஏன் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE