பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். 100 கோடி பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தி நாடு நேற்று வரலாற்று சாதனை படைத்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இன்று அக்22 காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் என்று தெரிவித்துள்ளது.
100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா இமாலய இலக்கை எட்டிய நிலையில் இது குறித்தும் பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
» உ.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன்: பிரியங்கா அறிவிப்பு
» ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கு: இந்தி நடிகை அனன்யா பாண்டேவிடம் 2 மணிநேரம் விசாரணை
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 100 கோடி தடுப்பூசி வரலாற்றுச் சாதனை குறித்து நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சவால்களுக்கு சாதனை மூலம் பதிலளிக்கும் இந்தியா
தடுப்பூசிப் போட ஆரம்பித்து சுமார் 9 மாதங்களில், 2021 அக்டோபர் 21 அன்று 100 கோடி டோஸ் தடுப்பூசியை இந்தியா நிறைவு செய்தது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிலைமை எப்படி இருந்தது என்பதை நினைத்து பார்க்கும் போது, கொவிட்-19-ஐ கையாள்வதில் இது மிகப்பெரியப் பயணமாக இருந்தது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகையப் பெருந்தொற்றை மனிதகுலம் எதிர்கொண்டது. மேலும், இந்த வைரஸ் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. கண்ணுக்குத் தெரியாத எதிரி வேகமாக உருமாறியதால், எத்தகைய எதிர்பாராத சூழ்நிலை உருவானது என்பதை நாம் நினைவில் கொள்கிறோம்.
கவலையில் இருந்து உத்தரவாதத்திற்கானப் பயணம் நடைபெற்று, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தின் பயனாக நமது தேசம் வலுவாக உருவெடுத்துள்ளது.
சமூகத்தின் பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு உண்மையான பகீரத முயற்சி இதுவாகும். ஒரு தடுப்பூசியைச் செலுத்த ஒரு சுகாதாரப் பணியாளருக்கு 2 நிமிடங்கள் மட்டுமே எடுத்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த விகிதத்தில், இந்த எண்ணிக்கையை அடைய சுமார் 41 லட்சம் மனித நாட்கள் அல்லது சுமார் 11 ஆயிரம் மனித ஆண்டுகள் முயற்சி தேவைப்பட்டது.
வேகம் மற்றும் எண்ணிக்கையை அடைவதற்கான எந்த முயற்சிக்கும், அனைத்து பங்குதாரர்களின் நம்பிக்கை முக்கியமானது. அவநம்பிக்கை மற்றும் பீதியை உருவாக்கப் பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற போதிலும், பிரச்சாரத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று, தடுப்பூசி மற்றும் செயல்முறை மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையே ஆகும்.
வெறுமனே அன்றாடத் தேவைகளுக்குக் கூட, வெளிநாட்டு பிராண்டுகளை மட்டுமே நம்பும் சிலர் நம்மிடையே உள்ளனர். இருப்பினும், கொவிட் -19 தடுப்பூசியைப் போன்ற முக்கியமான ஒன்றில் இந்திய மக்கள் ஒருமனதாக ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகளை நம்பினர். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரண மாற்றம்.
மக்களுடன் கூட்டு எனும் உணர்வில் மக்களும் அரசாங்கமும் ஒரு பொதுவான குறிக்கோளுடன் ஒன்றிணைந்தால் இந்தியாவால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இந்தியா தனது தடுப்பூசித் திட்டத்தை தொடங்கியபோது, 130 கோடி இந்தியர்களின் திறன்களை சந்தேகிக்கும் பலர் இருந்தனர். இலக்கை அடைய இந்தியாவுக்கு 3-4 ஆண்டுகள் ஆகும் என்று சிலர் கூறினர். வேறு சிலர் தடுப்பூசிப் போட மக்கள் முன் வரமாட்டார்கள் என்றனர். தடுப்பூசிப் போடுவதில் தவறான மேலாண்மை மற்றும் குழப்பம் இருக்கும் என்று கூறியவர்கள் இருந்தனர். இந்தியாவால் விநியோகச் சங்கிலிகளை நிர்வகிக்க முடியாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால் மக்கள் ஊரடங்கு மற்றும் அடுத்தடுத்த ஊரடங்குகளைப் போலவே, நம்பகமான பங்குதாரர்களாக அவர்கள் மாற்றப்பட்டால் முடிவுகள் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்பதை இந்திய மக்கள் காட்டினர்.
ஒவ்வொருவரும் உரிமை எடுத்துக் கொள்ளும்போது, சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை. மக்களுக்குத் தடுப்பூசிப் போடுவதற்கு நமது சுகாதாரப் பணியாளர்கள் மலைகளைக் கடந்து, கடினமான நிலப்பரப்பைக் கடந்து ஆறுகளைக் கடந்தனர். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் உள்ள தயக்கம் நம் நாட்டில் குறைந்த அளவிலேயே இருந்தது என்றால், அதற்கு நமது இளைஞர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சமூக மற்றும் மதத் தலைவர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவராவார்கள்.
தடுப்பூசியில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க பல்வேறு குழுக்களிடமிருந்து நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால், நமது மற்ற திட்டங்களைப் போலவே, தடுப்பூசி இயக்கத்திலும் விஐபி கலாச்சாரம் இல்லை என்பதை அரசு உறுதி செய்தது.
2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், கொவிட்-19 உலகெங்கும் பரவிக்கொண்டிருந்தபோது, இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பூசிகளின் உதவியுடன் தான் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே முன்கூட்டியே நாங்கள் தயாரானோம். நிபுணர் குழுக்களை உருவாக்கி, ஏப்ரல் 2020 முதல் ஒரு செயல்திட்டத்தை தயாரிக்கத் தொடங்கினோம்.
இன்று வரை, ஒரு சில நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. இந்தியா 100 கோடித் தடுப்பூசி எனும் அளவை தாண்டிய நிலையில், 180-க்கும் மேற்பட்ட நாடுகள் மிகவும் குறைந்தளவிலான உற்பத்தியாளர்களையே சார்ந்துள்ளன மற்றும் டஜன் கணக்கான நாடுகள் தடுப்பூசிகள் பெறுவதற்காக காத்திருக்கின்றன. இந்தியாவுக்கென சொந்தமாகத் தடுப்பூசி இல்லையென்றால் நிலைமையைக் கற்பனை செய்து பாருங்கள்.
இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்குப் போதுமானத் தடுப்பூசிகளை இந்தியா எவ்வாறு பெற்றிருக்கும், அதற்கு எத்தனை வருடங்கள் எடுத்திருக்கும்? இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு இதற்கானப் பாராட்டு தெரிவிக்கப்பட வேண்டும். அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பால் தான் தடுப்பூசிகளைப் பொறுத்தவரை இந்தியா உண்மையிலேயே தற்சார்பை எட்டியுள்ளது. நமது தடுப்பூசி உற்பத்தியாளர்கள், இவ்வளவு பெரிய மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம், அவர்கள் யாரையும் விட குறைவானவர்கள் இல்லை என்பதைக் காட்டியுள்ளனர்.
முன்னோக்கி நகர்வதைத் தடுக்கும் தடையாக அரசாங்கங்கள் அறியப்பட்ட ஒரு தேசத்தில், எங்கள் அரசு முன்னேற்றத்தை செயல்படுத்தி ஊக்குவிப்பவராக உள்ளது. முதல் நாளிலிருந்தே தடுப்பூசித் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்த அரசு, நிறுவன உதவி, அறிவியல் ஆராய்ச்சி, நிதி மற்றும் துரிதப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை செயல்முறைகளின் வடிவத்தில் அவர்களுக்கான ஆதரவை வழங்கியது. அரசின் அனைத்து அமைச்சகங்களும் ஒன்றிணைந்து தடுப்பூசித் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கித் தடைகளை நீக்கின.
இந்தியாவை போன்ற பெரிய நாட்டில், உற்பத்திச் செய்தால் மட்டும் போதாது. கடைசி மைல் விநியோகம் மற்றும் தடையற்றப் போக்குவரத்து மீது கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்புடையச் சவால்களைப் புரிந்து கொள்ள, தடுப்பூசிகளின் பயணத்தைக் கற்பனைச் செய்து பாருங்கள். புனே அல்லது ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆலையில் இருந்து, மாநிலத்தில் இருக்கும் ஒரு மையத்திற்குக் குப்பிகளை அனுப்பி, அங்கிருந்து அவை மாவட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து, தடுப்பூசி மையத்தை அவை அடைகின்றன. விமானங்கள் மற்றும் ரயில்களின் ஆயிரக்கணக்கானப் பயணங்கள் இதற்கு தேவைப்படுகின்றன. இந்த முழு பயணத்தின் போது, வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட வரம்பில் பராமரிக்க வேண்டும், இது மொத்தமாக கண்காணிக்கப்படுகிறது.
இதற்காக, 1 லட்சத்திற்கும் அதிகமான குளிர் சங்கிலி உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிகளின் விநியோக அட்டவணை குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது, இதனால் அவர்கள் தங்கள் செயல்பாடுகளை மிகச் சிறப்பாகத் திட்டமிட முடியும். மேலும், தடுப்பூசிகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நாட்களில் அவற்றை சென்றடைந்தன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது முன்னோடியில்லாத முயற்சி ஆகும்.
இந்த முயற்சிகள் அனைத்தும் கோவின்-இல் ஒரு வலுவான தொழில்நுட்பத் தளத்தின் மூலம் வலுவூட்டப்பட்டன. தடுப்பூசி இயக்கம் சமநிலையானது, அளவிடக்கூடியது, கண்காணிக்கக்கூடியது மற்றும் வெளிப்படையானது என்பதை இது உறுதி செய்தது. வேண்டியவர்களுக்கு வழங்குவதற்கு அல்லது வரிசையில் முந்தி செல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதை இது உறுதி செய்தது. ஒரு ஏழைத் தொழிலாளி தனது கிராமத்தில் முதல் டோஸையும், அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸை அவர் வேலை செய்யும் நகரத்தில், தேவையான இடைவெளிக்குப் பிறகு எடுக்க முடியும் என்பதையும் இது உறுதி செய்தது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நிகழ்நேர டேஷ்போர்டைத் தவிர, க்யூ ஆர்- குறியிடப்பட்டச் சான்றிதழ்கள் சரிபார்ப்பதை உறுதிசெய்தன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் மற்றப் பகுதிகளிலும் இதுபோன்ற முயற்சிகளுக்கு எந்த முன்னுதாரணமும் இல்லை.
2015-ம் ஆண்டு எனது சுதந்திர தின உரையில், 130 கோடி மக்களைக் கொண்ட இந்திய அணி என்ற உணர்வில் நமது நாடு முன்னோக்கி செல்கிறது என்று கூறியிருந்தேன். மக்களின் பங்கேற்பு ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். 130 கோடி இந்தியர்களின் பங்கேற்பின் மூலம் நாட்டை நடத்தினால், நம் நாடு ஒவ்வொரு கணமும் 130 கோடி படிகள் முன்னேறும். நமது தடுப்பூசி இயக்கம் மீண்டும் இந்த 'டீம் இந்தியா'-வின் சக்தியைக் காட்டியது. தடுப்பூசி போடுவதில் இந்தியாவின் வெற்றி, 'ஜனநாயகத்தால் சாதிக்க முடியும்' என்பதை உலகம் முழுவதும் நிரூபித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி, பொதுச் சேவை விநியோகத்தில் புதிய அளவுகோல்களை நம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் முன்மாதிரியாக இருக்கும் அளவில் உருவாக்க நமது இளைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசின் அனைத்து நிலைகளையும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago