இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்; கேரள நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு: மாநிலம் முழுவதும் மீட்புப் பணிகள் தீவிரம்- முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் ஆறுகளிலும் சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனிடையே கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்டநிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது.கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றதால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. தெற்கே திருவனந்தபுரம் தொடங்கி வடக்கே காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்துவருகிறது. இடைவிடாது பெய்தமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர,மற்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மாநிலத்தில் உள்ள எல்லா நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நதிகளை ஒட்டியுள்ள பல மாவட்டங்களை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள் நீரில்மூழ்கி கடல்போல காட்சி அளிக்கின்றன. பேருந்துகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி, உணவுப் பொருட்கள் வருவதும் தடைபட்டுள்ளது. பல பகுதிகளில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கடும் நிலச்சரிவு

இதனிடையே, பலத்த மழைகாரணமாக கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிங்கால் மற்றும் இடுக்கி மாவட்டத்தின் கோக்கையார் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பல வீடுகள் சேற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர். இதில் முதல்கட்டமாக 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்உட்பட 14 பேரும், இடுக்கி நிலச்சரிவில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 13-க்கும்மேற்பட்டோரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக கேரளஅரசு தெரிவித்துள்ளது. கோழிக்கோட்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 2 விமானப் படை ஹெலிகாப்டர்கள் தமிழகத்தின் கோவையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன.

இதனிடையே, கேரள மழை வெள்ள நிலவரம் குறித்து மாநிலமுதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று கேட்டறிந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர்பக்கத்தில் மோடி கூறியிருப்பதாவது: கேரளாவில் மழை, வெள்ளபாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். அப்போது, மத்திய அரசு தரப்பில் இருந்து கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் அதிகாரிகள் களப்பணியாற்றி வருகின்றனர்.

கேரளாவில் நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தசம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளாவை மீட்டுக் கொண்டுவர அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.மீட்புப் பணிகளில் கடற்படை,விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கூடுதல் உதவிகளையும் வழங்க அரசு தயாராக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், ‘‘மாநிலம் முழுவதும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மத்திய அரசிடம்கூடுதலாக மீட்புப் படையினரை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளோம். மக்கள் யாரும் அச்சப்படதேவையில்லை. அனைத்து பகுதிகளிலும் வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முகாம்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

குமரி மாவட்டத்தில் 23 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி இரவு முதல் கனமழை பெய்தது. தொடர் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருகின்றன. மழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் பேச்சிப்பாறை, மரப்பாடி, வலியாற்றுமுகம், அருவிக்கரை, மாத்தூர், திக்குறிச்சி, காப்பிக்காடு, மங்காடு, ஞாறான்விளை, பிலாந்தோட்டம், வாவறை, இஞ்சிபறம்பு, பள்ளிக்கல், ஏழுதேசம் உள்ளிட்ட 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த மக்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.

மலை கிராமங்களுக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. தோவாளை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

குறும்பனையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும்நிஷான் (17) என்பவர் நண்பர்களுடன் கடியப்பட்டணம் தடுப்பணையில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அருமனை முழுக்கோட்டில் உள்ள குளத்தில் மழையின்போது குளித்துக் கொண்டிருந்த ஜெபின்(18) என்பவர் நீரில் மூழ்கிஇறந்தார். வாளையத்துவயலைச் சேர்ந்த சித்திரைவேல் (40) என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்புத் துறையினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர்.

நேற்று காலை முதல் மழை சற்று ஓய்ந்ததையடுத்து மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 275 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 20,862 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,915 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ளபாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து தற்போது 131.30 அடியாக உள்ளது. அதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டமும் ஒரேநாளில் 22 அடி உயர்ந்துள்ளது. 52.25 அடி உயரம்உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பியது. தென்காசிமாவட்டத்திலும் அணை பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரே நாளில் கடனாநதி அணை நீர்மட்டம் 15 அடியும் ராமநதி அணை நீர்மட்டம் 13 அடியும் உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்