மாமியாரைக் கொலை செய்ய பாம்பு: புதிய பாணியில் கொன்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

By செய்திப்பிரிவு

பாம்பைப் பயன்படுத்தி மாமியாரைக் கொலை செய்த பெண்ணுக்கும், அவருக்கு துணையாக இருந்தவருக்கும் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்தியாவில் பாம்புக் கடியால் உயிரிழப்பது இயல்பாக நடக்கிறது. ஆனால், பாம்பை திட்டமிட்டு பயன்படுத்தி, ஆயுதமாக்கி மூதாட்டியைக் கொலை செய்ததற்கு ஜாமீன் வழங்கிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜூன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அல்பனா, சச்சின் தம்பதி. இதில் சச்சின் ராணுவ வீரர் என்பதால், மனைவியை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு ராணுவப் பணிக்குச் சென்றுவிட்டார். திருமணம் ஆனபின்பும், அல்பனா தனது முன்னாள் காதலரும் ஜெய்ப்பூரில் வசிக்கும் மணிஷுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார்.

இது குறித்து அறிந்த வயதான மாமியார் சுபோத் தேவி அல்பனாவைக் கண்டித்துள்ளார். வீட்டில் இருக்கும் மாமனார் ராஜேஷும் அடிக்கடி வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றதால், மாமியாருக்கும், மருமகளுக்கும் தொடர்ந்து தகராறு நடந்துள்ளது

இ்ந்நிலையில் தனது முன்னாள் காதலன் ராஜேஷ், அவரின் நண்பர் கிருஷ்ண குமார் ஆகியோருடன் பேசி, தனது மாமியாரைக் கொல்ல அல்பனா திட்டமிட்டார். இதற்காக மாமியார் தூங்கும்போது அவரின் படுக்கை அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை ஒரு பையில் வைத்து அதை கடிக்கவைத்து கொல்ல முடிவு செய்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு, ஜூன் 2-ம்தேதி பாம்பு கடியால் மாமியார் சுபோத் தேவி உயிரிழந்தார்.மருத்துவமனைக்கு சுபோத் தேவி கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவி்ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுபோத் தேவி இறப்பில் சந்தேகமடைந்த போலீஸார், அல்பனா செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது, சுபோத் தேவி இறப்பதற்கு முதல்நாள் இரவு ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றது கண்டு சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அல்பனா, அவரின் முன்னாள் காதலர் மணிஷ், அவரின் நண்பர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் பாம்பைப் பயன்படுத்தி மாமியாரைக் கொல்ல மருமகளும் அவருடன் சேர்ந்த 2 பேரும் சதி செய்தது தெரியவந்தது.

ராஜஸ்தானில் பாம்புக் கடியால் உயிரிழப்பது இயல்பான ஒன்று, ஆண்டுதோறும் ஏராளமானோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள் என்பதால், இந்த மூதாட்டி இறப்பையும் அவ்வாறு கருதுவார்கள் என்று அல்பனா நினைத்துள்ளார். ஆனால், போலீஸார் விசாரணையில் அனைத்தும் வெளியானது.

இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில இருக்கும் மூவரும்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ இதுஎன்ன புதுமாதிரி கொலை ஆயுதமாக இருக்கிறது. பாம்பை கொடூரமான ஆயுதமாக மாற்றி ஒரு மனிதரைக் கொலை செய்கிறார்களா. இதற்காக பாம்பாட்டியிடம் இருந்து பாம்பையும் வாங்கி பயன்படுத்தியுள்ளார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுபோன்று பாம்பை பயன்படுத்தி கொலை செய்வது வழக்கமாகிவிட்டது” எனத் தெரிவித்தனர்.

மனுதாரர் கிருஷ்ணகுமார் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ஆதித்யா சவுத்ரி வாதிடுகையில் “ குற்றம்சாட்டப்பட்ட மனுதாரர் கிருஷ்ணகுமாருக்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. என் மனுதாரர் கிருஷ்ண குமார் ரூ.10 ஆயிரத்துக்கு பாம்பு வாங்கி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுளதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மருத்துவக் காரணத்துக்காக பாம்பு வாங்கிக் கொடுத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு மனுதாரர் சென்றதில்லை. கிருஷ்ணகுமார் பொறியியல் மாணவர் என்பதால் அவரின் எதிர்காலம் வீணாகிவிடும்” எனத் தெரிவி்த்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு “ ராஜஸ்தானில் பாம்புகளைப் பயன்படுத்தி கொலை செய்வது இயல்பானது ஆனால், இந்தவழக்கில் மூவரும் புதிய முறையில் பாம்பைப் பயன்படுத்தி ஒருநபரைக் கொலை செய்துள்ளீர்கள்.பாம்பாட்டியிடம் இருந்து பாம்பை வாங்கித் தருவதற்கு மனுதாரர் உதவியுள்ளார். ஆதலால் ஜாமீன் வழங்கிட முடியாது” எனத் தள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE