கரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை மீட்கும் வழிமுறைகள்: கல்வியாளர்கள், எம்.பி.க்கள் பரிந்துரை

By பிடிஐ

கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் இயல்புக்குத் திரும்பவும், கற்றல் இழப்பில் இருந்து மீளவும் பல்வேறு வழிமுறைகளை எம்.பி.க்கள், கல்வியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குழந்தைகளுக்கான நாடாளுமன்றக் குழு, யுனிசெஃப் மற்றும் ஸ்வநிதி அமைப்பு ஆகியவை இணைந்து, ஆன்லைனில் கருத்தரங்கத்தை நடத்தின. அதில், ‘பெருந்தொற்றில் இருந்து மீள்வதில் குழந்தைகளுக்கான பள்ளிகள் திறப்பு மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்’ குறித்து விவாதிக்கப்பட்டது.

கருத்தரங்கத்தில், கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் இயல்புக்குத் திரும்பவும் கற்றல் இழப்பில் இருந்து மீளவும் பல்வேறு வழிமுறைகளை எம்.பி.க்கள், கல்வியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 5 முதல் 12-ம் வகுப்பு வரை தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. முன்னதாக, மகாராஷ்டிரக் கல்வித்துறை மற்றும் யுனிசெஃப் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், ''பள்ளிகள் மூடப்பட்டதில் இருந்து 14 மாதங்களாக 36 சதவீத மாணவர்களுக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவில்லை. 16 சதவீத மாணவர்கள் வீட்டில் இருந்து வெளியே சென்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பள்ளிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இது தேசிய இழப்பு'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவுரவ் கோகாய் எம்.பி. கூறும்போது, ''குழந்தைகள் வளரவும், கற்றுக்கொள்ளவும் பள்ளி என்ற ஒன்று நேரடியாகத் தேவைப்படும் சூழலில், அவர்கள் தனிமையில் வாழவேண்டிய நிலையைப் பெருந்தொற்று ஏற்படுத்திவிட்டது. பள்ளிகள் மூடல் கற்றலைக் கடுமையாக பாதித்துள்ளது. குழந்தைகளின் முக்கியமான வளர்ச்சி நிலைகளில், பள்ளிகள் மூடப்பட்டதால் அவர்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் மகாராஷ்டிராவின் தலைமைக் கள அலுவலர் ராஜேஸ்வரி சந்திரசேகர் கூறும்போது, ''பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். தற்போது ஆரம்ப நிலை வகுப்புகள் தொடங்கப்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். தொலைதூரக் கல்வியின் சவாலையும் கற்றல் இழப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினரும் எம்.பி.யுமான ஃபவுஸியா கான் கூறும்போது, ''குழந்தைகளிடையே நன்னெறிகளும் ஒழுக்கமும் குறைந்திருப்பது மற்றொரு சவால். நிறையக் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் அமர்ந்திருந்தாலும் நிஜத்தில் கற்பதில்லை. கரோனா குழந்தைகள் மத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குறிப்பாக மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்'' என்று கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி கூறும்போது, ''கல்வித் துறையில் களத்தில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க, மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள், பெற்றோர், அதிகாரிகள், ஆசிரியர்கள் அனைவரையும் கொண்டு குழு அமைக்கப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE