‘‘ட்ரோன்கள் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்’’- பிரதமர் மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் ட்ரோன்கள் தயாரிக்க தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும், இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் திறன் ட்ரோன்களுக்கு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

மத்தியப்பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 1.7 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் மோடி இன்று வழங்கினார். பயனாளிகளிடையே பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என அடிக்கடி கூறப்படுகிறது, ஆனால், சுதந்திரத்துக்குப்பின் பல தசாப்தங்களுக்குப் பிறகும், கிராமங்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. கிராமங்களின் சக்தி, நிலம் மற்றும் கிராம மக்களின் வீடுகளை அவர்களின் வளர்ச்சிக்காக முழுவதுமாக பயன்படுத்த முடியவில்லை.

மாறாக, கிராம நிலங்கள் மற்றும் வீடுகள் மீதான தகராறுகள், சண்டைகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் கிராம மக்களின் சக்தி, நேரம், பணம் வீணடிக்கப்பட்டது. இப்பிரச்சினை குறித்து மகாத்மா காந்தி கவலைப்பட்டார். குஜராத்தில் நான் முதல்வராக இருந்தபோது ‘சமரச கிராம பஞ்சாயத்து திட்டம்’ அமல்படுத்தப்பட்டது.

கரோனா காலத்தில் தனிமையில் வசிப்பதற்கான ஏற்பாடுகள், உணவு ஏற்பாடு செய்தது, வெளியிடங்களில் இருந்து வந்தவர்களுக்கான வேலை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்திய கிராமங்கள் முன்னணியில் இருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் விடா முயற்சியுடன் பின்பற்றப்பட்டது.

சிக்கலான நேரங்களில், தொற்றை கட்டுப்படுத்துவதில் கிராமங்கள் முக்கிய பங்காற்றின. ஸ்வாமித்வா திட்டம் சொத்து ஆவணங்கள் வழங்கும் திட்டம் மட்டும் அல்ல, இது வளர்ச்சிக்கான புதிய மந்திரம் மற்றும் இது நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமங்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. கணக்கெடுப்பு பணிக்காக கிராமங்களில் பறக்கும் ட்ரோன், இந்திய கிராமங்களுக்கு புதிய விமானத்தை அளிக்கின்றன.

ஏழைகள் மற்றவரை சார்ந்திருப்பதில் இருந்து விடுவிக்க, கடந்த 6-7 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது. தற்போது, சிறு விவசாய தேவைகளுக்கு, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் அரசு அலுவலகங்களில் ஏழைகள் அலைந்து திரிந்த காலம் எல்லாம் சென்று விட்டது. தற்போது, அரசு ஏழைகளிடம் வந்து அதிகாரம் அளிக்கிறது. துணை நபரின் உத்திரவாதம் இன்றி, மக்களுக்கு கடன் வழங்குவதில் முத்ரா திட்டம் முன்மாதிரியாக உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில், ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு, சுமார் 29 கோடி கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் இன்று 70 லட்சம் சுயஉதவி குழுக்கள் பணியாற்றுகின்றன, ஜன்தன் கணக்குகள் மூலம் பெண்கள் வங்கி கணக்கு பெற்றுள்ளனர். துணை நபர் உத்திரவாதம் இல்லாமல், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வரம்பை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதேபோல், 25 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளனர். இந்தியாவில் ட்ரோன் உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், அதிக அளவிலான நவீன ட்ரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் குறைந்த விலையில் ட்ரோன்கள் தயாரிக்க விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மென்பொருள் நிபுணர்கள் மற்றும் தொடக்க நிறுவன தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் திறன் ட்ரோன்களுக்கு உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE