காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கைது முழுக்க சட்டவிரோதம். உத்தரப் பிரதேசத்தில் முழுமையாகச் சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லக்கிம்பூர் கெரியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பிரியங்கா காந்தி கடந்த 28 மணி நேரமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது சிஆர்பிசி 151 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தி கைதில் எந்த சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை எனக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''சீதாபூரில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சூழல், சம்பவத்தின் உண்மை ஆகியவை, உத்தரப் பிரதேசத்தில் முழுமையாகச் சட்டத்தின் ஆட்சி இல்லை என்பதையே காட்டுகிறது. பிரியங்கா காந்தி கடந்த 4-ம் தேதி காலை 4.30 மணிக்குக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதாபூர் பிஏசி விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட் இருவரும் சீதாராபூரில் இருக்கிறார்கள். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பிரியங்கா காந்தி சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி சிஆர்பிசி 151-வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியென்றால், சிஆர்பிசி 151-வது பிரிவின் கீழ் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டால், நீதிமன்ற நீதிபதி உத்தரவு அல்லது சட்டவிதிகள் தவிர்த்து 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பிரியங்கா காந்தி கடந்த 30 மணி நேரமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை.
எந்த மாஜிஸ்திரேட்டும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. பிரியங்கா காந்தியின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் பிரிவு 19, 21 ஆகியவை முழுமையாக மீறப்பட்டுள்ளன. சிஆர்பிசியின் பல்வேறு பிரிவுகளையும் இந்தக் கைது மீறியுள்ளது.
எந்தப் பெண்ணையும் சூரிய உதயத்துக்கு முன்போ அல்லது சூரிய மறைவுக்குப் பின்போ கைது செய்யக்கூடாது. ஆனால், பிரியங்கா காந்தி அதிகாலை 4.30 மணிக்குக் கைது செய்யப்பட்டார். அவரை ஆண் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்ததும் சட்டவிரோதம். கைது செய்யும்போது எந்த உத்தரவு ஆணையும் அளிக்கப்படவில்லை. அவரிடம் எந்த கையொப்பமும் வாங்கவில்லை என்பது சட்டவிரோதம்.
உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது ஆதித்யநாத்தின் சட்டம் மற்றும் ஆதித்யநாத்தின் ஒழுங்காகும். உ.பி.யில் உள்ள போலீஸார் சட்டத்துக்குப் பணிந்து நடக்காமல், ஆதித்யநாத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குக்குக் கட்டுப்படுகிறார்கள்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago