யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று அமரீந்தர் சிங் எண்ணுகிறார்: ஹரீஷ் ராவத் சாடல்

By செய்திப்பிரிவு

கேப்டன் அமரீந்தர் சிங் தன்னை கட்சியில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று எண்ணுகிறார் என மூத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து திடீரென ராஜினாமா செய்தார்.

இதனிடையே கட்சி மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார்.

இந்தநிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அமரீந்தர் சிங் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் "இதுவரை நான் காங்கிரஸில் இருக்கிறேன் ஆனால் நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். நான் ஏற்கெனவே எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரக்குறிப்பு பகுதியில் காங்கிரஸை என்ற வார்த்தையை நீக்கியுள்ளார்.

இந்தநிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத் அமரீந்தர் சிங்கை கடுமையாக சாடியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு ரகசிய புரிதல் இருக்கிறது. இது நாங்கள் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இதுபற்றி ஒரு பொதுவான கருத்து இருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். குறைந்தது ஐந்து முறையாவது நான் கேப்டன் அமரீந்தர் சிங்கை சந்தித்து பேசினேன். இந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை.

அரசையும் கட்சியையும் தனது பண்ணை வீட்டிலிருந்து அமரீந்தர் சிங் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர் தலைமைச் செயலகத்தில் இல்லாதது பேசுவதில்லை. இதுகுறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று அவர் எண்ணுகிறார்.

கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸால் அவமதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. கேப்டனின் சமீபத்திய கருத்துகள் அவர் ஒருவித அழுத்தத்தில் இருப்பதை உணர்த்துகிறது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாஜகவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவக்கூடாது. இது எனது வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE