இந்தியா வந்துள்ள சவுதி அமைச்சருடன் ஆப்கன் பற்றி மத்திய அமைச்சர் பேச்சு

இந்தியா வந்துள்ள சவுதி வெளியுறவு அமைச்சர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார். இவர்கள் ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சாத் நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தடைந்தார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கன் அரசியல் நிலவரம் மற்றும் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடியை அல் சாத் சந்தித்துப் பேச உள்ளார்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், அந்நாட்டின் வளர்ச்சி குறித்து உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் சவுதி வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக, ஈரான் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவுன் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

ஆப்கனில் அமைந்துள்ள புதிய அரசை அங்கீகரிப்பது குறித்து உலக நாடுகள் கூட்டாக சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE