தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட பொதுவான கருத்தியல்: ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தீவிரமயமாக்கலை எதிர்க்கவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் பொதுவான கருத்தியலை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21-வது மாநாடு தஜகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியோ, ஈரான், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் புதிதாக இந்த அமைப்பில் இணைந்துள்ளன.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசினார். அவர் அப்போது கூறியதாவது:

இந்த ஆண்டு, தஜிகிஸ்தான் 30 வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், இந்திய மக்கள் சார்பாக தஜிகிஸ்தான் சகோதர சகோதரிகளுக்கும், அதிபர் ரஹ்மோனைக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த ஆண்டு நாம் எஸ்சிஒ அமைப்பின் 20-வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். இந்த நல்ல தருணத்தில் புதிய நண்பர்கள் நம்முடன் இணைவது மகிழ்ச்சியான விஷயம். எஸ்சிஒ அமைப்பின் புதிய உறுப்பினராக ஈரானை வரவேற்கிறேன். சவுதி அரேபியா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய மூன்று புதிய பங்குதார நாடுகளையும் நான் வரவேற்கிறேன்.

எஸ்சிஒ-ன் விரிவாக்கம் நமது அமைப்பின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டுகிறது. புதிய உறுப்பினர்கள் மற்றும் பங்குதார நாடுகள் மூலம் எஸ்சிஒ அமைப்பு மேலும் வலுவானதாகவும் மிகவும் நம்பகமானதாகவும் மாறும்.

எஸ்சிஓ- வின் 20 வது ஆண்டு விழா எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க ஏற்ற சந்தர்ப்பமாகும். இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய சவால்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை பற்றாக்குறை ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று நான் நம்புகிறேன்.

மேலும் இந்த பிரச்சினைகளின் அடிப்படை காரணம் அதிகரித்து வரும் தீவிரவாதமாகும். ஆப்கானிஸ்தானின் சமீபத்திய முன்னேற்றங்கள் இந்த சவாலை இன்னும் வெளிப்படையாகக் காட்டியுள்ளன இந்த பிரச்சினையில் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

நம் வரலாற்றைப் பார்த்தால், மத்திய ஆசியா பகுதிகள் மிதவாத முற்போக்கான கலாச்சாரங்கள் மற்றும் விழுமியங்களின் கோட்டையாக இருந்ததைக் காணலாம். சூஃபியிசம் போன்ற மரபுகள் பல நூற்றாண்டுகளாக இங்கு செழித்து வளர்ந்ததுடன், நாடு முழுவதும் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவியுள்ளன.

இப்பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் அவர்களின் செல்வாக்கை நாம் இன்னும் காணலாம். மத்திய ஆசியாவின் இந்த வரலாற்று பாரம்பரியத்தின் அடிப்படையில், எஸ்சிஓ தீவிரமயமாக்கல் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட ஒரு பொதுவான கருத்தியலை உருவாக்க வேண்டும்.

இந்தியாவிலும், கிட்டத்தட்ட அனைத்து எஸ்சிஓ நாடுகளிலும், மிதமான, சகிப்புத்தன்மை உள்ளடக்கிய நிறுவனங்கள் மற்றும் இஸ்லாத்துடன் தொடர்புடைய மரபுகள் உள்ளன. எஸ்சிஓ அவர்களுக்கு இடையே ஒரு வலுவான நெட்வொர்க்கை உருவாக்க வேலை செய்ய வேண்டும்.

தீவிரமயமாக்கலை எதிர்த்துப் போராடுவது பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கு மட்டுமல்ல, நமது இளைய தலைமுறையினரின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவசியம். வளர்ந்த உலகத்துடன் போட்டியிட, நமது பகுதி வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பங்குதாரராக மாற வேண்டும். இதற்காக நமது திறமையான இளைஞர்களை அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையை நோக்கி ஊக்குவிக்க வேண்டும்.

நமது இளம் தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் மூலம் இந்த வகையான சிந்தனையையும், புதுமையான உணர்வையும் நாம் ஊக்குவிக்க முடியும். இந்த அணுகுமுறையின் மூலம், இந்தியா கடந்த ஆண்டு முதல் எஸ்சிஓ ஆரம்ப நிலை தொழில்முனைவோர் கூட்டமைப்பு மற்றும் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டை ஏற்பாடு செய்தது. முந்தைய ஆண்டுகளில், இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தில் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியது.

யுபிஐ மற்றும் ரூபே கார்டு போன்ற தொழில்நுட்பங்கள் நிதி சேர்ப்பை அதிகரிக்க பயன்படுத்தினாலும், கோவிட்-க்கு எதிரான போராட்டத்தில் நமது ஆரோக்கிய-சேது மற்றும் கோவின் போன்ற டிஜிட்டல் தளங்களாக இருந்தாலும், நாங்கள் தானாகவே முன்வந்து மற்ற நாடுகளுக்கும் பகிர்ந்துகொண்டோம். இந்த எஸ்சிஓ கூட்டாளர்களுடனும் இந்த திறந்த மூல தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

மத்திய ஆசியாவுடனான தொடர்பை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. நிலங்களால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவின் பரந்த சந்தையுடன் இணைப்பதன் மூலம் பெரும் நன்மை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, பரஸ்பர நம்பிக்கை இல்லாததால் பல இணைப்பு விருப்பங்கள் இன்று அவர்களுக்கு திறக்கப்படவில்லை. ஈரானின் சாபஹார் துறைமுகத்தில் எங்களது முதலீடு மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு வழித்தடத்தை நோக்கிய எங்கள் முயற்சிகள் இந்த நம்பிக்கையால் இயக்கப்படுகின்றன.

இணைப்புக்கான எந்தவொரு முயற்சியும் ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது. இணைப்புத் திட்டங்கள் பரஸ்பர நம்பிக்கையை உறுதிப்படுத்த ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் பங்களிப்பும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்த பிராந்தியத்தின் பாரம்பரிய இணைப்பை நாம் மீட்டெடுக்க முடியும்/

அப்போதுதான் இணைப்புத் திட்டங்கள் நம்மை இணைக்க வேலை செய்யும், நமக்கிடையே உள்ள தூரத்தை அதிகரிக்காது. இந்த முயற்சிக்கு, இந்தியா தனது தரப்பில் இருந்து எந்த பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்