மே.வங்கத்தில் பவானிபூர் இடைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி திடீரென யு-டர்ன் அடித்துள்ளது.
கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி இப்போது மம்தாவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. மே மாதம் நடந்த தேர்தலில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு இடத்தைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தேர்தலுக்குப்பின் பாஜகவை தனி ஆளாக எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லிக்கு 5 நாட்கள் கடந்த ஜூலை மாதம் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரையும் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப்பின் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட மம்தா இணக்கமாக உள்ளார். இதனால், இடைத் தேர்தலில் மம்தாவுக்கு எதிராக எந்த வேட்பாளரையும் காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை எனத் தெரிகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும்,வேளாண்அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.
இந்த முறை பவானிபூரில் போட்டியிடும்பட்சத்தில் மம்தாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில் “ பவானிபூர் இடைத் தேர்தலில் முதல்வர் மம்தாபானர்ஜிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பில் எந்த வேட்பாளரையும் நிறுத்தப்போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் கருத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
ஆனால், சிபிஎம் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில் “திரிணமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக நிச்சயம் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம். காங்கிரஸ் கட்சியிடம் சென்று முடிவை மாற்றுங்கள் என நாங்கள் கேட்க முடியாது” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
23 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago