ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தலிபான்களையும் ஒப்பிட்டது தவறு: பாடலாசிரியர் ஜாவித் அக்தருக்கு சிவசேனா கண்டனம்

By பிடிஐ

ஆர்எஸ்எஸ் அமைப்பையும், தலிபான் தீவிரவாத அமைப்பையும் பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஒப்பிட்டுப் பேசியது முழுமையாகத் தவறானது என்று சிவசேனா கட்சி கண்டித்துள்ளது.

பாலிவுட் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆர்எஸ்எஸ் அமைப்பையும், தலிபான் தீவிரவாத அமைப்பையும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு சிவசேனா கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இது தொடர்பாக எழுதப்பட்ட தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்து தேசம் தேவை என்ற கோரிக்கையை வைக்கும் ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை எவ்வாறு தலிபான் தீவிரவாதிகள் மனநிலையோடு ஜாவித் அக்தர் ஒப்பிட்டுப் பேச முடியும்? இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கருத்தை ஏற்கவும் மாட்டோம்.

தலிபான் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் கோருகிறார்கள். ஆனால், இவர்கள் இந்து தேசத்தைக் கோருகிறார்கள். ஜாவித் அக்தர் மதச்சார்பற்றவர், அடிப்படைவாதத்துக்கு எதிராகப் பலமுறை பேசியுள்ளார். ஆனால், இந்த விஷயத்தில் தலிபான் தீவிரவாதிகளுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்டுப் பேசியது தவறானது.

இந்து தேசம் கோருபவர்கள் மிதவாதிகள். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்தபோது, மத அடிப்படையில்தான் பிரிந்தது. இந்து தேசத்துக்கு ஆதரவாக இருப்போர் என்று விரும்புவோர் கூட பெரும்பகுதி இந்துக்களை ஒதுக்கிவிடக் கூடாது என்று மட்டுமே விரும்பினர். இந்துத்துவா என்பது கலாச்சாரம், இந்தக் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்துபவர்களைத் தடுக்கவே கோருகிறார்கள்.

தலிபான் தீவிரவாதிகளையும், இந்து கலாச்சாரத்தையும் ஒப்பிட்டது இந்து கலாச்சாரத்தை அவமதித்தது போன்றது. ஆர்எஸ்எஸ் கோட்பாடு, சித்தாந்தங்களுடன் முரண்பாடு இருக்கலாம். ஆனால், அதைத் தலிபான்களுடன் ஒப்பிட்டது தவறு.

ஆர்எஸ்எஸ், விஹெச்பி ஆகிய அமைப்புகள் தலிபான்கள் அமைப்புகளோடு இணையானவையா என்பதை அக்தர் சுயபரிசோதனை செய்து பேச வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு விஹெச்பி, ஆர்எஸ்எஸ் ஏதேனும் கட்டுப்பாடு விதித்துள்ளதா?

ஆனால், தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கனின் சூழல் நெஞ்சைப் பதறவைக்கிறது. அந்த நாட்டு மக்களே சொந்த மண்ணில் வாழ முடியாமல், அச்சத்தால், பெண்களைக் காப்பாற்றும் நோக்கில் வேறு நாட்டுக்குச் செல்கிறார்கள்.

தலிபான்களுடன் எதையாவது ஒப்பிட்டுப் பேசுவது என்பது சமூகத்துக்கும், மனிதநேயத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானும், சீனாவும் தலிபான்களுக்கு ஆதரவாக உள்ளன. ஏனென்றால் இந்த நாடுகளில் மனித உரிமைகளே இல்லை. ஆனால், இந்தியா ஜனநாயக நாடு, தனிநபர் சுதந்திரத்தை மதிக்கிறோம்.

ஜாவித் அக்தர் பலமுறை முஸ்லிம் சமூகத்தில் அடிப்படைவாதக் கருத்துகளை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். ஆனால், சங்பரிவாரங்களையும், தலிபான்களையும் ஒப்பிட்டதை ஏற்க முடியாது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் மதச்சார்பற்றவர்கள். மற்றொரு சமூகத்தின் மீது மதிப்பு கொண்டுள்ளார்கள். தலிபான் சித்தாந்தங்களை நாங்கள் ஏற்கமாட்டோம். பெரும்பான்மையான இந்து மக்களுக்கு இந்தியா வீடாக இருக்கிறது. மதச் சார்பற்ற நாடு என்பதில் பெருமை கொள்கிறோம்''.

இ்வ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்