பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்? இம்மாத இறுதியில் செல்ல வாய்ப்பு

By ஏஎன்ஐ

பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது முதல் கட்டத் தகவல்தான். இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கான தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி ஒருவேளை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால் வரும் 23, 24ஆம் தேதிகளில் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது.

கடைசியாக 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். ஹூஸ்டன் நகரில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் அப்போது அதிபராக இருந்த ட்ரம்ப்புடன் சேர்ந்து பிரமதர் மோடி பங்கேற்றார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லா உறுப்பினராக இருக்கும் இந்தியா, கடந்த ஒரு மாதமாகத் தலைமை வகித்தது. ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றிய சமயத்தில் தீர்மானமும் இந்தியா தலைமையில் பாதுகாப்பு கவுன்சலில் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இதுவரை உறுதி செய்யவில்லை. ஒருவேளை வரும் நாட்களில் பிரதமர் மோடியின் பயணம் உறுதியானால், அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் இருவரும் முதல் முறையாக நேரடியாகச் சந்திப்பார்கள்.

குவாட் மற்றும் ஜி7 கூட்டங்களில் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாகச் சந்தித்துள்ளனர். ஆனால், நேரடியாக இருவரும் சந்திக்கவில்லை. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றால் இரு தலைவர்களும் முதல் முறையாக நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE