ஆப்கனில் தலிபான்கள் அரசை இந்தியா அங்கீகரிக்கிறதா? மத்திய அரசு பதில்

By ஏஎன்ஐ


ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தலைமையில் அமையும் புதிய அரசை இந்தியா அங்கீகரிக்குமா என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டை தலிபான்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இன்னும் சில நாட்களில் தலிபான்கள் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாகவும், இன்று பிற்பகலுக்குப்பின் அதற்கான அறிவிப்புகள் வரலாம் எனக் கூறப்படுகிறது.

ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதாவது தலிபான்களின் உயர் மட்டத் தலைவர் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பொறுப்பேற்று அரசியல் மற்றும் மதரீதியான விவரங்களுக்கும் தலைவராக இருந்து அதிபருக்கும் அப்பாற்பட்டு செயல்படுவார். அந்தப் பதவியை தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த சில நாட்களுக்கு முன் தலிபான்கள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. அந்த பேச்சு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரிந்தம் பக்சி நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவரிடம், இந்தியா, தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கிறதா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ஆரிந்தம் பக்சி பதில் அளிக்கையில் “ தலிபான்கள் ஆட்சியை மத்திய அரசு அங்கீகரிக்கிறதா என்ற இப்போதே இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. தோஹாவில் நாங்கள் தலிபான்களுடன் ஒரு சந்திப்பு நடத்தியிருக்கிறோம் அவ்வளவுதான். இதுபற்றி விரிவாக ஏதும் கூற முடியாது.

தலிபான்கள் தீவிரவாத அமைப்பா அல்லது இல்லையா என்பது எங்கள் நோக்கமல்ல. எங்களைப் பொறுத்தவரை ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின், அந்நாட்டைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிராக நடத்த தீவிரவாத செயல்கள் நடத்த அனுமதிக்ககூடாது என்பதுதான். அதில்தான் கவனமாக இருக்கிறோம். ஆப்கானில் புதிய ஆட்சி தலிபான்கள் தலைமையில் அமைவது குறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் இல்லை, அது தொடர்பாக எந்த அழைப்பும் இல்லை.

ஆப்கனில் தலிபான்கள் தலைமையில் புதிய அரசு அமையப் போகிறது என ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தேன். மத்திய அரசுக்கு எந்த அழைப்பும் தலிபான்கள் சார்பில் விடுக்கப்படவில்லை. இந்தியாவைச் சேர்ந்தவர்களையும், சில ஆப்கன் மக்களையும் காபூலில் இருந்து அழைத்துவர முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது காபூல் விமானநிலையம் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது, விமானநிலையம் செயல்பாட்டுக்கு வந்தபின் அதுகுறித்து பேசுவோம்”

இவ்வாறு பக்சி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE