சமூக ஊடகங்கள், இணையதளங்களில் போலிச் செய்திகள், மதவெறுப்பைத் தூண்டும் கருத்துகள் வெளியாவது குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஊடகங்களில் சில பிரிவுகள், அனைத்தையும் மதரீதியாகப் பார்க்கின்றன. இதனால் தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்று காட்டமாகத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் கரோனா வைரஸ் பரவலின்போது, டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மத மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில் தப்லீக் ஜமாத் மத மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் நாட்டில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவியது என்று ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், “தப்லீக் ஜமாத் மத மாநாட்டின் மூலம்தான் கரோனா பரவியது என்று பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள். அந்தச் செய்தியை நிறுத்த உத்தரவிட வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக தப்லீக் ஜமாத் மாநாடு நடந்தபோது, கரோனா வைரஸ் பரவியதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றம் சாட்டுகிறார்கள், அச்சமூட்டுகிறார்கள். இதுபோன்ற செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, சூர்யகாந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக ஊடகங்கள் குறித்து தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்து மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “பிரச்சினை என்னவென்றால், இந்த நாட்டில் ஒவ்வொன்றையும் ஊடகங்களில் சில பிரிவு வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இது தேசத்துக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
வெப் சேனல்கள், ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப், போன்ற சமூக ஊடகங்களிடம் சாமானிய மக்கள், நீதிபதிகள் ஏதும் புகார்கள் அளித்தால் அவர்களுக்கு பதில் அளிப்பதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் சமூக ஊடகங்கள் பதில் அளிக்கின்றன.
நீதிபதிகளுக்கும், அரசு அமைப்புகளுக்கும் எதிராக நம்பகத்தன்மை இல்லாத பல கருத்துகளை சமூக ஊடகங்கள் எழுதியுள்ளன. அரசு அமைப்புகள், தனி மனிதர்கள், நீதிபதிகள் அளிக்கும் புகார்களை சமூக ஊடகங்கள் மறந்துவிடுகின்றன. இதுதான் நிதர்சனம்.
இந்த இணையதளங்களைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. தனியார் சேனல்களை ஒழுங்குபடுத்த ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா?
இணையதளங்கள், யூடியூப் சேனல்களில் போலிச் செய்திகள், மத வேறுபாடுகளைத் தூண்டிவிடும் கருத்துகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. போலிச் செய்திகள் சுதந்திரமாகப் பரப்பி விடப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்க முடிகிறது” எனத் தெரிவித்தது.
இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், “சமூக ஊடகங்களில் நடக்கும் விதிமுறை மீறல்களை ஒழுங்குபடுத்தவே புதிதாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பயனாளிகள் அளிக்கும் புகார்களைத் தீர்க்க தனியாகக் குறைதீர்க்கும் அதிகாரி ஒவ்வொரு சமூக ஊடகத்திலும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அதிகாரியும் இந்தியாவைச் சேர்ந்தவராகவே இருக்கிறார். தொலைக்காட்சி சேனல்கள் மீதான புகார்களை விசாரிக்க கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் இருக்கிறது.
இதில் புகார்களை விசாரிக்க 3 வகையான முறைகள் உள்ளன. இப்போது உண்மையான போட்டி என்பது, பத்திரிகை சுதந்திரம், மற்றும் மக்களின் உரிமை ஆகியவற்றுக்கு இடையே கலப்படமற்ற செய்தியைப் பெறுவதுதான். இவற்றுக்கு இடையே சமநிலையை உருவாக்க முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே சமூக ஊடகங்கள், வெப் போர்ட்டல் போன்றவற்றில் ஆன்லைன் கன்டென்ட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை ஒரே வழக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க மத்திய அரசு சார்பில் கோரப்பட்டது. இந்த மனுவை 6 வாரங்களுக்குப் பின் விசாரிப்பதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago