காபூல் குண்டுவெடிப்பு; ஆப்கனில் ஏற்படும் மாற்றங்களை  உன்னிப்பாக கவனிக்கிறோம்: இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.

ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.

நிலையற்ற சூழல் ஆப்கனில் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி, நாட்டை விட்டுச் செல்லும் மனநிலையில், அச்சத்தோடும் பீதியோடும் உள்ளனர்.

ஆப்கனில் சிக்கியிருக்கும் பல்வேறு நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் வெளிேயற்றி வருகின்றன. ஆப்கனில் தங்கியுள்ள இந்தியர்கள் மட்டுமின்றி, ஆப்கன் நாட்டைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்களையும் மத்திய அரசு பாதுகாப்புடன் இந்தியா அழைத்து வருகிறது.

இந்தநிலையில் காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தநிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இதுபற்றி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை வெளியேற்றுவதில் இந்தியாவின் கவனம் உள்ளது.

நாங்கள் தொடர்ந்து நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம். அங்கு அடிக்கடி மாற்றங்கள் நிகழந்து வருகின்றன. இதனால் மிகவும் கவனத்துடன் அணுகுகிறோம்.

ஆப்கனில் நிலைமை நிச்சயமற்றது. மக்களின் பாதுகாப்பே இப்போது முக்கியம். காபூலில் தற்போது எப்படி ஆட்சியமையும் என்ற தெளிவு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE