உத்தவ் தாக்கரே பற்றி அவதூறாக பேசிய வழக்கு; நாராயண் ரானேவுக்கு  ஜாமீன் 

உத்தவ் தாக்கரே பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே ‘‘சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன்’’ என பேசினார்.

இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினருக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்கள் மும்பையில் மோதிக் கொண்டனர். நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

நாசிக் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது மத்திய அமைச்சரை கைது செய்யவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து அவர் தன் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடைகோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காகவ விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனையடுத்து நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி அவர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் தனிநபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேசமயம் செப்டம்பர் 2-ம் தேதி மீண்டும் காவல்துறையினர் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE