செப். இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும்: கேரள சுகாதார அமைச்சர்

செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என கேரள சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் கரோனா நிலவரம் குறித்து இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமை வகித்தார்.

அப்போது அவர், கேரள மாநிலத்தில் செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கரோனா தடுப்பூசித் திட்டம் எந்த ஒரு மாவட்டத்திலும் சுணக்கம் காணாத வகையில், தடுப்பூசிகள், சிரிஞ்சுகள் என அனைத்தும் கிடைக்கப்பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஆனால், அதற்கு அந்தந்த மாவட்டங்கள் தடுப்பூசி செயற் திட்டங்களை தெளிவாகத் தீட்டுமாறு அவர் அறிவுறுத்தினார்.

மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை:

இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் நேற்று பிரதமர் அலுவலகத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் மாநிலத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், ஐசியுக்கள், வென்டிலேட்டர்கள் ஆகியனவற்றின் இருப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர் (சுகாதாரம்) ஆஷா தாமஸ், முதன்மைச் செயலர் ராஜன் கோப்ரகடே ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE