‘‘அடக்குமுறையை கண்டு பயப்பட மாட்டோம்’’ - நாராயண் ரானே கைதுக்கு ஜே.பி. நட்டா கண்டனம்

நாராயண் ரானே கைதுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘‘சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன்’’ என மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூட்டம் ஒன்றில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினருக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்கள் மும்பையில் மோதிக் கொண்டனர். நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

நாசிக் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது மத்திய அமைச்சரை கைது செய்யவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து அவர் தன் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடைகோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காகவ விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனையடுத்து நாராயண் ரானே கைது செய்யப்பட்டார். அவரை சங்கேமஸ்வர் அழைத்துச் செல்ல ரத்னகிரி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

20 ஆண்டுகளில் கைது செய்யப்படும் முதல் மத்திய அமைச்சர் நாராயண் ரானே ஆவார். நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

நாராயண் ரானே கைதுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தல் கூறியுள்ளதாவது:

‘‘மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இதுபோன்ற நடவடிக்கையால் நாங்கள் பயப்படவோ அடங்கி போகவோ மாட்டோம்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE