‘‘உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்’’- சர்ச்சையாக பேசிய நாராயண் ரானே கைது: பாஜக கண்டனம் 

சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை, அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன் எனக்கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம் கூட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை. சுதந்திர தின உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டார். உரையின் பாதியில், தனது உதவியாளரிடம் அதனை கேட்டு தெரிந்து கொண்டார்.

இது அவமானமாக உள்ளது. சுதந்திர தின உரையின்போது அவருக்கு எத்தனையாவது ஆண்டை கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள உதவியை நாடிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினருக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்கள் மும்பையில் மோதிக் கொண்டனர். நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

நாசிக் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது மத்திய அமைச்சரை கைது செய்யவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து அவர் தன் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடைகோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காகவ விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனையடுத்து நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். அவரை சங்கேமஸ்வர் அழைத்துச் செல்ல ரத்னகிரி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

20 ஆண்டுகளில் கைது செய்யப்படும் முதல் மத்திய அமைச்சர் நாராயண் ரானே ஆவார். நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE