அக்டோபரில் கரோனா 3-வது அலை; குழந்தைகளை தாக்குமா: தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சொல்வதென்ன?

By செய்திப்பிரிவு

அக்டோபரில் கரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் என எச்சரித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் குழந்தைகளுக்கான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் தொடங்கிய கரோனா இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அன்றாட பாதிப்பு 4.5 லட்சத்தையும் கடந்து சென்றது. தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரியவர்களை விட மூன்றாவது கோவிட் அலை குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுவதற்கு போதிய ஆதாரம் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருவதாக நிபுணர் குழு கூறியுள்ளது.


அதே நேரத்தில் அதேவேளையில், குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டுகளை தயார்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் கூடுதலாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனாவின் முதல் அலையின்போது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இறப்பு விகிதம் குறைவு. தற்போது இரண்டாம் அலையில் 18 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குக் குறைவான இளையோர் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகினர். இரண்டாம் அலையின்போது கரோனா வைரஸ் வேற்றுருவம் கொண்டுவிட்டது. இதன் அறிகுறிகள் சட்டெனத் தெரியாத நிலையில் நேரடியாக நுரையீரலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குழந்தைகளே பரவலாகப் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் மருத்துவத் துறையினர் சிலர் சொல்கின்றனர்.

முதல் அலையின்போது 45 வயதுக்கு மேற்பட் டோரும் இரண்டாம் அலையில் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் குழந்தைகள் மட்டுமே தடுப்பூசிக் கவசமின்றி உள்ளனர். அதனால், மூன்றாம் அலை ஏற்படும்பட்சத்தில் அவர்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE