கத்தார் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை

கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தஹானியை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானின் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கத்தார வெளியுறவு அமைச்சரும், துணைப் பிரதமருமான அல் தஹானியை தோஹாவில் சந்தித்தேன். ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளை பகிர்ந்து கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இரண்டாவது நாளான நேற்று, பயங்கரவாதிகளால் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் பாகிஸ்தான் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற ரத்தக்கறை படிந்த சில அமைப்புகளுக்கு சில நாடுகள் பாதுகாப்பு கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான், தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில் இந்தியா கூர்மையாக அடுத்தடுத்த அரசியல் நிலவரங்களைக் கூர்மையாகக் கவனித்து வருகிறது.

தலிபான்களை பாகிஸ்தான் வளர்த்துவிட்டதும் இப்போதும் ஆதரிப்பதும் அனைவரும் தெரிந்த விஷயம் என்பதால் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைந்திருப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்ற கணிப்புகளை அடுத்து இந்திய அரசு தலிபான் நகர்வுகளைக் கூர்ந்து கவனிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE