மிகமோசமாக இருக்கிறது: நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை

By பிடிஐ


நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் சட்டம் இயற்றும்போது போதுமான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இன்றி இருப்பது சட்டத்தை தெளிவற்றதாக்கி, நீதித்துறைக்கு சுமையை ஏற்றுகிறது. இவற்றின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா வேதனை தெரிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திரதின விழா உற்சாகமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் பார் கவுன்சில் சார்பில் சுதந்திரதின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தலைைம நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கான்வில்கர், வி.ராமசுப்பிரமணியன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள்தான் தலைமை வகித்துள்ளனர். மகாத்மா காந்தி ,பாபு ராஜேந்திர பிரசாத் என சட்டம் பயின்ற பலர் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளனர். அவர்களின் சொத்துக்கள்,குடும்ப வாழ்க்கை அனைத்தையும் தேசத்துக்காக தியாகம் செய்துள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைந்து முதன்முதலில் மக்களவை, மாநிலங்களவை அமைக்கப்பட்டபோது, அதில் இடம் பெற்றவர்கள் பெரும்பாலும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள்.சட்டத்திருத்தங்கள் மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து நாடாளுமன்றத்தை விவாதம் நடத்த பயன்படுத்தப்பட வேண்டும். துரதிர்ஷ்டம், நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பதற்கு பதிலாக இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.

நீண்டகாலத்துக்கு முன், தொழில்துறை சிக்கல் சட்டம் குறித்த அறிமுகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. மிக விரிவாகப் பேசி, எந்த சட்டம் எவ்வாறு தொழிலாளர்களை பாதிக்கிறது என்று விளக்கம் அளித்தார். இதுபோன்று நாடாளுமன்றத்தில் சட்டங்கள் குறித்து விவாதங்கள் நடத்தினால், நீதிமன்றத்தின் சுமை குறையும். சட்டத்தைப் பற்றி நீதிமன்றங்கள் விளக்கியபோது, சட்டப்பேரவை நோக்கம் குறித்து அனைவருக்கும் தெரிந்தது.

இப்போது, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் நடப்பது எனக்கு மிகவும் வேதனையாகஇருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றம்போது போதுமான அளவு விவாதங்கள் நடத்தாதபோது, அந்த சட்டத்தில் பெரிய இடைவெளியும், குழப்பமான சூழலும் ஏற்படும். எதற்காக இந்த சட்டங்கள் எல்லாம் இயற்றுகிறார்கள் என எங்களுக்குத்தெரியவி்ல்லை. இதன் விளைவுகள் மக்களுக்கு பெரும் இடர்பாடுகளை ஏற்படுத்தும். சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறாதபோது இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கும்.

வழக்கறிஞர்கள் தங்கள் பணியையும், தங்களையும் எல்லைக்குள் வைக்காதீர்கள். நன்றாக பணம் ஈட்டுங்கள், வசதியாக வாழுங்கள். அதற்கு மேலும் சிந்தியுங்கள். பொது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும், சிறந்த சேவைகளை வழங்கி, அந்த அனுபவத்தை தேசத்துக்கு வழங்கிட வேண்டும். நல்ல விஷயங்கள் வெளிவரும் என நம்புகிறேன்.

சின்ன விஷயங்கள்தான், ஆனால், 75 சதவீத மக்களுக்கு நீதி பெறுவதற்கு சட்டஉதவி தேவை. சட்ட உதவிக்கான இயக்கத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். வரும் நவம்பர் 26,27ம் தேதிகளில் அரசியலமைப்புச்சட்டம் குறித்த பயிற்சிப்பட்டறை நடக்கிறது அதில் பங்கேற்க வேண்டும்.

நாட்டின் வரலாற்றில் 75 ஆண்டுகள் என்பது சிறிய காலம் இல்லை. ஆனால், நாட்டின் நிலப்பரப்பு மற்றும் பூகோள அமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய சிறுவயதில் சுதந்திரத்தன்று வெல்லம், அரிசியில் செய்யப்பட்ட இனிப்புகளை வழங்குவார்கள். ஆனால், இன்று ஏராளமான வளர்ச்சி நிகழ்ந்துவி்ட்டது.

பள்ளிக்காலத்தில் நடந்த சிறிய விஷயங்கள் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருந்தன. ஆனால் இன்று, நமக்கு பல வசதிகள் இருந்தபோதிலும் நாம் மகிழ்ச்சியாக இல்லை. நம்முடைய திருப்திபடும் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன்

இவ்வாறு என்.வி.ரமணா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE