ஓம் பிர்லாவுடன் பிரதமர் மோடி, சோனியா காந்தி சந்திப்பு

By செய்திப்பிரிவு

மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே மக்களவை முடிந்து கொள்ளப்பட்ட நிலையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன.

இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரங்களில் 78 மணி நேரம் 30 நிமிடங்களில் 60 மணி நேரம் 28 நிமிடங்கள் வீணாகின.

ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மட்டுமே நடைபெற வேண்டும்.

அதற்கு 3 நாட்கள் முன்பாகவே மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில் ‘‘மக்களவை மொத்தம் 96 மணிநேரம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் 21 மணிநேரமும் 14 நிமிடமும் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 22 சதவீதம் அளவுக்கு மட்டுமே அவை நடந்துள்ளது. மொத்தம் 74 மணிநேரமும் 46 நிமிடங்களும் வீணாகியுள்ளன. 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் ஓபிசி மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஓம் பிர்லாவை அவரது அறையில் முக்கிய கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் சிரோண்மனி அகாலிதளம், திரிணமூல் காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் மோடி வணங்கியதுடன் சிறிது நேரம் பேசினார்.



கூட்டத்தொடர் முடிவடையும்போது நடைபெறும் வழக்கமான சந்திப்பு இது என்றாலும், உறுப்பினர்கள் அனைவரும் சபை சுமூகமாக நடைபெறவும், அவையின் மாண்பு காக்கப்படும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என ஓம் பிர்லா அப்போது வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE