ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் ரயில்களை மாற்ற மத்திய அரசு திட்டம்

By செய்திப்பிரிவு

டீசலில் இயங்கும் ரயில்களை ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரவும் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில், டீசலில் இயங்கும் ரயில்களை (டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் -டிஇஎம்யு) ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2.3 கோடி மிச்சமாகும். அத்துடன் ஆண்டுக்கு 11.12 கிலோ டன் கார்பன் டை ஆக்சைடு மற்றும் 0.72 கிலோ டன் துகள்கள் வெளியேற்றம் தடுக்கப்படும். இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக முதலில் 2 ரயில்களை மட்டும் ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான தொழில்நுட்பம் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளன. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், டீசலில் இயங்கும் ரயில்களை மாற்றி ஹைட்ரஜனில் இயங்க வைக்க முடியுமா என பரிசோதிக்கப்படும். ஹரியாணா மாநிலம் சோனிபட்-ஜிந்த் மார்க்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஒரு சில நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. ஜெர்மனியில் இது தொடர்பான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE