பி.எப். பணம் ரூ.37 கோடி கையாடல்; கரோனா காலத்தில் ஆன்லைன் முறைகேடு

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் பி.எப் பணத்தின் ஒருபகுதியை எடுத்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி விணணப்பிக்காதவர்களின் பணம் 37 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உழைத்து சேமித்த தொகை உறிஞ்சப்பட்டுள்ள நிலையில் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா முதல் அலையின்போது பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் ஒரு பகுதியாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது. கரோனா 2-வது அலையில் தொழிலாளர்களின் நலன் கருதி அதே சிறப்புத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.

இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்பு தொகை, இதில் எது குறைவோ அந்த தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இதைவிட குறைவான தொகையை எடுக்கவும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

முதல் கரோனா அலையின்போது இபிஎப் நிதியில் இருந்து முன்பணம் எடுத்தவர்கள் இப்போதும் முன்பணத்தை எடுக்கலாம். விண்ணப்பித்த 20 நாட்களில் பணம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு விண்ணப்பித்த 3 நாட்களில் முன்பணம் வழங்க இபிஎப்ஓ விரைவாக நடவடிக்கை எடுத்தது.

கரோனா சிறப்பு முன்பணம் எடுக்கும் திட்டம் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப் பினர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. குறிப்பாக ரூ.15,000-க்கும் குறைவான மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து முறைகேடாக 37 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட விவரம் தற்போது தெரியவந்துள்ளது. மும்பை மண்டல அலுவலகத்தில் இருந்து இந்த பணம் முறைகேடாக எடுக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கரோனா காலத்தில் பணி இழந்ததாலோ அல்லது பி.எப் பணத்தை மாற்றாமல் இருந்ததாலோ கணக்கை ரத்து செய்யாமல் அதிலிருந்து ஒரு பகுதி எடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் இணையவழியில் பணத்தை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உழைத்து சேமித்த தொகை உறிஞ்சப்பட்டுள்ள நிலையில் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை காண்டிவிலியில் உள்ள அலுவலகத்தில் உள்ள கணக்குகளை ஆடிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE