ஜிஎஸ்டி முறைகேடுகள்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

வரி செலுத்துவோர், மின்னணுத் தளங்களில் கூட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இது தொடர்பாக, வைகோ எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

"1. கடந்த மூன்று ஆண்டுகளில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு எவ்வளவு? ஆண்டுவாரியாகக் கணக்கு தருக.

2. முற்றிலும் கணினிமயம் ஆக்கப்பட்ட பின்னரும், இத்தகைய வரி ஏய்ப்புக்கான காரணங்கள் என்ன?

3. மனிதர்களின் தவறா? அல்லது கணினிகளின் கோளாறா?

4. இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க, மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?".

ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

வைகோ: கோப்புப்படம்

இக்கேள்விகளுக்கு, மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த விளக்கம்:

"கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கணக்கு விவரங்கள்.

1. 2019-20 10,657 முறைகேடுகள். மொத்த தொகை ரூ.40,853.27 கோடி. அதில், 18,464.07 கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது.

2. 2020-21 ஆம் நிதி ஆண்டில், 12,596 முறைகேடுகள்.

மொத்த தொகை ரூ.49,383.96 கோடி. அதில், 12,235 கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது.

3. 2021-22 நிதி ஆண்டில், ஜூன் 21ஆம் நாள் முடிய, கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள் 1,580. மொத்தத் தொகை ரூ.7,421.27 கோடி. அதில், 1,920 கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது.

கேள்வி எண் 2-க்கு விளக்கம்:

ஜிஎஸ்டி வரிக் கணக்குகள் முழுமையும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளது உண்மைதான். வரி செலுத்துவோர், சட்டம் மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும். ஆயினும்கூட, வரி செலுத்துவோர், மின்னணுத் தளங்களில் கூட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். பதிவு செய்யும்போது, பொய்ச் சான்று ஆவணங்களைத் தருகின்றனர்; உண்மைத் தகவல்களை மறைத்து விடுகின்றனர்; வரிச்சலுகை பெற, விலைப் பட்டியலை உயர்த்தி விடுகின்றனர்; பொருள்களின் தர வகைப்பாடுகளைத் தவறாகத் தருகின்றனர்.

கேள்வி 3-க்கு விளக்கம்:

தெரிந்தே வரி ஏய்ப்பு செய்யலாம்; சில வேளைகளில் பிழைகள் நேர்வதும் உண்டு. ஆனால், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes & Customs-CBIC) கணினிகளில் கோளாறு எதுவும் இல்லை.

கேள்வி 4-க்கு விளக்கம்:

வரி ஏய்ப்பைத் தடுக்க, சரக்கு மற்றும் சேவை வரிகள் வலைப்பின்னல் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இணைந்து (GSTN-CBIC) கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

1. புதிய விண்ணப்பங்களுடன் ஆதார் எண் இணைக்கின்றோம். அவ்வாறு ஆதார் எண் தராதவர்கள் அல்லது வேறு ஏதேனும் அடையாள ஆவணங்களை இணைக்காதவர்களின் வணிக மையங்களுக்கு நேரடியாகச் சென்று, அவர்களுடைய அடையாளங்களைச் சரிபார்க்கின்றோம்.

2. புதிய பதிவு கோருவோரது, முந்தைய பதிவுகளைச் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3. வரித்துறையின் நம்பிக்கையைப் பெறாத வரி செலுத்துவோரின் பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதற்கும், பதிவை நீக்குவதற்கும் ஏற்பாடுகள்.

4. உளவுத் தகவல்களின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரிப் பதிவுகளை, பெரும் அளவில் இடைநிறுத்தம் செய்து இருக்கின்றோம்; அது தொடர்பான மேல் நடவடிக்கைகளை, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தொடர்கின்றது.

5. ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களாக, ஜிஎஸ்டிஆர் 3 பி கணக்கு பதிவு செய்யாத, எண்ணற்றவர்களின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

6. உள் வரி வரவுக் கடன் (Internal Tax Credit) வழங்குவது தடை செய்யப்படுகின்றது.

7. ஜிஎஸ்டிஆர் 2 ஏ மூலம், உள் வரி வரவுக் கடன் கணக்குகள் சோதிக்கப்படுகின்றன".

இவ்வாறு பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE