கேரளாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று: கடைக்குச் செல்ல தடுப்பூசி அல்லது நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

By செய்திப்பிரிவு

கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடைக்கு செல்பவர்கள் தடுப்பூசி அல்லது கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக கடைகளை திறக்க அனுமதி வழங்கினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொது இடங்களுக்கு செல்பவர்கள் குறைந்த பட்சம் இரண்டு வாரத்துக்கு முன், முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் அல்லது72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை செய்து இல்லை என்பதை உறுதிபடுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கடைகள், மார்க்கெட், வங்கி, திறந்தவெளி சுற்றுலா மையம், வியாபார நிறுவனங்களுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பாலான மக்கள் இன்னமும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில் கேரள அரசின் இந்த உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் முடக்கி விடும் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE