‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்களிடம் பா.ஜ.க எம்.பி.க்கள் அம்பலப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது எம்.பி.க்கள் இடையே பிரதமர் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் எண்ணமே இல்லை. நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆர்வம் இல்லை.

நாடாளுமன்றத்தை இயங்க அனுமதிக்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திலும் அக்கட்சி கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்களிடம் பா.ஜ.க எம்.பி.க்கள் அம்பலப்படுத்த வேண்டும். மக்கள் விரோத செயல்களை ஊடகங்களிடமும் பாஜக எம்.பி.க்கள் எடுத்துக் கூற வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE